“சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டான மும்தாஜ்…” என்ற கேப்ஷனுடன் முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருவதாக, பெண் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதனை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Google Arts & Culture வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. அதன்படி, “இப்புகைப்படம் விக்டோரியா மகாராணிக்கு 1887ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அன்று டாக்டர் ஜான் வில்லியம் டைலர் வழங்கிய ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இதில் இருப்பது போபாலின் மூன்றாம் பேகமான நவாப் ஷாஜஹான் பேகம். இந்த புகைப்படத்தை காலனித்துவ இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஸ்டுடியோக்களில் ஒன்றான போர்ன் மற்றும் ஷெப்பர்ட் ஸ்டுடியோவில் 1877ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே புகைப்படத்தை போபாலின் மூன்றாம் பேகம் என்ற தகவலுடன் Pinterest மற்றும் Dawn என்கிற பாகிஸ்தானிய ஊடகம் பதிவிட்டுள்ளது.
மேலும், மற்றொரு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, நியூஸ் 18 ஹிந்தி ஊடகம் வைரலாகும் புகைப்படத்துடன் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், இவர் பேகம் சுல்தான் ஜஹான் என்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக இவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவரை பேகம் சுல்தான் ஜஹான் என்று குறிப்பிட்டு வைரலாகும் புகைப்படத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி இவர் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜின் புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் உண்மையில் போபாலின் பேகம் இருவரின் புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.