Fact Check: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானியின் புகைப்படமா? உண்மை என்ன?

நடுவானில் பழுது ஏற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி என்று சமூக வலைதளங்களில் ஒருவரது புகைப்படம் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  18 Oct 2024 8:54 PM IST
Fact Check: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானியின் புகைப்படமா? உண்மை என்ன?
Claim: நடுவானில் பழுதான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானி
Fact: இத்தகவல் தவறானது. அதில் இருப்பவர் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த விமானி ராகேஷ் குமார் ராணா

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: IX613), இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 144 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டது. நடுவானில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த விமானம் பிறகு பத்திரமாக திருச்சி விமானத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், “நம் Air India விமான ஓட்டுநருக்கு பாதம் பணிந்த நன்றிகள். 144 பயணிகளையும் பத்திரமாக மீட்ட இந்த விமானிக்கு பாராட்டுக்கள்” என்ற கேப்ஷனுடன் #AirIndiaExpress ஹேஷ்டேக்குடன் விமானி ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இருப்பவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானி என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் புகைப்படத்தில் இருப்பவர் இந்திய கடலோர காவவ்படையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவருடைய புகைப்படத்துடன் அக்டோபர் 11ஆம் தேதி NDTV செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதன்படி, ALH MK-III ரக ஹெலிகாப்டர் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று குஜராத்தின் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த மூன்று பேர் காணாமல் போயினர். இருவரது உடல்கள் பின்னர் மீட்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்தது.

ராணாவின் உடல் போர்பந்தருக்கு தென்மேற்கே 55 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இருந்து அக்டோபர் 10ஆம் தேதி மீட்கப்பட்டது என்று கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை India Today, Tribune India உள்பட பல ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானி இல்லை என்பது தெளிவாகிறது.


இருவேறு புகைப்படங்கள்

தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானி குறித்து தேடுகையில், விமானிகளின் புகைப்படத்துடன் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், 144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் துணை விமானி Maitryee Shrikrishna Shitole என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பழுது ஏற்பட்டு நிலையில் அதனை பத்திரமாக தரையிறக்கிய விமான என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் ராகேஷ் குமார் ராணா என்ற இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த விமானி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அவர் குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் ஹெலிகாப்டர் கடலில் மூழ்கியதில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Claim Review:பழுதான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கிய விமானி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X, Threads
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. அதில் இருப்பவர் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த விமானி ராகேஷ் குமார் ராணா
Next Story