Fact Check: பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் - 2024 என்று வைரலாகும் தகவல்; உண்மை என்ன?

பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் 2024 என்று சமூக வலைதளங்களில் தகவலுடன் கூடிய இணைய லிங்க் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  25 April 2024 11:55 PM IST
Fact Check: பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் - 2024 என்று வைரலாகும் தகவல்; உண்மை என்ன?
Claim: பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்
Fact: இது ஒரு ஸ்பேம். இப்படியான திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தவில்லை

“பிரேக்கிங் நியூஸ்! PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன! விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வரத் தொடங்கியுள்ளன” என்ற தகவலுடன் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும் கூறி சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று இணைய லிங்குடன்(https://giftst.vje6zf.top?lma=n87) வைரலாகி வருகிறது.

Fact-check:

இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் இந்தியாவில் அவ்வாறான திட்டம் நடைமுறையில் உள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இந்திய அரசாங்கத்தின் சார்பாக அவ்வாறாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து தேடுகையில், ஒன்றிய அரசின் AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது தெரியவந்தது. “இத்தகவல் வதந்தி என்றும் AICTE அவ்வாறான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் AICTE மறுத்துள்ளது”. இது குறித்து ANI கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, வைரலாகும் இணைய லிங்க்கை ஆய்வு செய்ததில் அதில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது போன்ற புகைப்படம் இருந்தது. அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது 2023ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அங்கம் வகிக்கும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(Archive) கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அந்நாட்டில் செயல்படுத்தப்படும் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் என்று இணையதளத்தில் இருந்த அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்(Archive) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேலும், அந்த லிங்கில் தகவல்களை பதிவு செய்து பார்த்தோம். அப்போது, “இந்த தகவலை வாட்ஸ்அப்பில் 15 நண்பர்கள் அல்லது 5 குழுக்களுடன் பகிர்ந்து கொண்டால்” இலவச மடிக்கணினி பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இது ஒரு ஸ்பேம் என்பது தெரியவந்தது.


ஸ்பேம் தகவல்

Conclusion:

நம் தேடலின் முடிவாக பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் 2024 என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் லிங்க் ஒரு ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் 2024 என்று வைரலாகும் தகவல் மற்றும் இணைய லிங்க்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X, WhatsApp
Claim Fact Check:False
Fact:இது ஒரு ஸ்பேம். இப்படியான திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தவில்லை
Next Story