"தொப்பி போட்டு நோன்பு கஞ்சி குடித்து இஸ்லாமியர்களை திராவிட கட்சிகள் ஓட்டுக்காக ஏமாற்றுகின்றனர் என சொன்ன சங்கிகள் கூட்டம், இஸ்லாமிய நாடான எகிப்தில் பள்ளிவாசலில் தொப்பி போட்டுகொண்டு முஸ்லிம் வேடத்தில் நிற்பது யார் ???" என்று பிரதமர் நரேந்திர மோடி தொப்பி அணிந்து இஸ்லாமிய மதகுருமார்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் புகைப்படத்தைப் போன்றே பிரதமர் நரேந்திர மோடி தொப்பி இன்றி இருக்கும் புகைப்படத்துடன் UNI கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 10) மும்பையில் தாவூதி போஹ்ரா சமூகத்தின் அல்ஜாமியா-துஸ்-சைஃபியா அரபு அகாடமியின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்" என்று கூறப்பட்டிருந்தது. Mid-day, ABP உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், "மும்பையில் @jamea_saifiyah புதிய வளாகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
பிரதமரின் டுவிட்டர் பதிவு
Conclusion:
நமக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், வைரலாகும் புகைப்படம் மும்பையில் உள்ள அரபு அகாடமியின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தொப்பியின்றி அவர் இருக்கும் புகைப்படத்தை தொப்பியுடன் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.