Fact Check: பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கத் தொடங்கியுள்ளன என்று வைரலாகும் லிங்க்? உண்மை என்ன?
2024ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கத் தொடங்கியுள்ளன என்று சமூக வலைதளங்களில் லிங்க் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 19 Jun 2024 12:48 AM ISTClaim: 2024ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கத் தொடங்கப்பட்டுள்ளதாக வைரலாகும் லிங்க்
Fact: வைரலாகும் லிங்க் ஸ்பேம் என்று தெரியவந்தது
“பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. எங்கள் திட்டம் தங்கள் வாழ்க்கையின் அடிப்படைகளை வாங்க முடியாத நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நபர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன! விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே 10000 ரூபிள் பெறத் தொடங்கியுள்ளனர். காலக்கெடுவை:06/19/2024” என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவதாக கூறி இத்தகவலை பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இந்தியாவில் வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தெரியவந்தது. அதில் ஒன்றான National Family Benefit Scheme என்ற திட்டம் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு குடும்பத்தை ஆதரிப்பவர் உயிரிழந்தால், இறப்புக்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல், இழந்த குடும்பங்களுக்கு ரூபாய் 20,000 நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
இறந்தவரின் குடும்பத்தில் விசாரணைக்குப் பிறகு, குடும்பத் தலைவர் யார் என்று கண்டறியப்பட்டு எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. மரணிக்கும் போது இறந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், 60 வயதுக்குக் குறைவானவராகவும் இருக்கு வேண்டும். இத்திட்டத்திற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க https://web.umang.gov.in/web_new/home என்ற லிங்கின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று myscheme.gov.in என்ற இந்திய அரசின் திட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டத்தில் கீழ் மாதம் ரூபாய் 10,000 வழங்கப்படுவதாக வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பது நமது தேடலில் மூலம் தெரிய வந்தது.
தொடர்ந்து, வைரலாகும் லிங்கை கிளிக் செய்து அதனை ஆய்வு செய்ததில் அதில் Pradhan Mantri Swanidhi Yojana Scheme என்று இந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதுகுறித்து தேடுகையில், “வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தெருவோர வியாபாரிகளுக்கு கடன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அவர்களுக்கு அதிகாரம் அளிக்க, PM தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
சுமார் 50 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு, சுற்றியுள்ள புறநகர்/கிராமப்புறப் பகுதிகள் உட்பட, நகர்ப்புறங்களில் தங்கள் வணிகங்களைத் தொடர உதவும் வகையில், ஓராண்டு கால அவகாசத்தில் ரூபாய் 10,000 வரையிலான பிணைய இலவச செயல்பாட்டு மூலதனக் கடன்களை எளிதாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அரசு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலாகும் லிங்க்
மேலும் லிங்கை ஆய்வு செய்தபோது, இந்திய நாணயத்தின் பெயரை ரூபாய் என்பதற்கு பதிலாக ரூபிள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ரூபிள் என்பது ரஷ்ய நாட்டு நாணயத்தின் பெயராகும். மேலும், அந்த லிங்கில் கேட்கப்பட்ட தகவல்களை பதிவிட்டோம். அப்போது, இறுதியாக, “இந்தத் தகவலை 15 நண்பர்கள் அல்லது 5 குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளவும்” என்று கூறப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு இது ஸ்பேம் என்பது தெரியவந்தது.
ரூபிள் என்று லிங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது
Conclusion:
நம் தேடலின் முடிவாக 2024ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் லிங்க் ஸ்பேம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.