“ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற ஸ்டாலின் ஏவல் துறை....... வாயை பொத்தி இழுத்து செல்ல யார் உத்தரவு போட்டது…” என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவரை காவல் துறையினர் வாயைப் பொத்தி இழுத்துச் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் தற்போது திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறி பகிர்ந்து வருகின்றனர்.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இந்நிகழ்வு 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்று தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The Quint ஊடகம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வைரலாகும் காணொலியில் உள்ள அதே சம்பவத்தின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சனிக்கிழமை (ஜனவரி 2) தொண்டாமுத்தூரில் உள்ள தேவராயபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின் போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி கேட்டதற்காக அதிமுக பெண் நிர்வாகியை திமுகவினர் தாக்கினர். அப்பெண், கோவை தெற்கு மாவட்ட அதிமுக மகளிர் பிரிவுத் தலைவி பூங்கொடி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The News Minute வெளியிட்டுள்ள செய்தி
மேலும், இச்சம்பவம் தொடர்பாக The News Minute வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் பொதுமக்களை கேள்விகள் கேட்க அனுமதித்த நிலையில், தலையில் திமுக தொப்பியுடன் அமர்ந்திருந்த பூங்கொடி எழுந்து நின்று கேள்வி எழுப்பினார். ஐந்து பெண்கள் ஏற்கனவே கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டதால், பூங்கொடியைச் சுற்றி இருந்த திமுக தொண்டர்கள் அமரச் சொன்னார்கள்.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினிடம் “கோவையில் ஏன் கிராமசபை கூட்டத்தை நடத்துகிறீர்கள்” என்று கேட்டதற்கு, அவர் “நீங்கள் யார்” என்று கேட்டார். அதற்கு பூங்குடி, "நான் ஒரு இந்திய குடிமகன்" என்று பதிலளித்தார். பிறகு “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” என்று ஸ்டாலின் கேட்டபோது, “குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம்” என்று பதிலளித்தார் பூங்கொடி. “உங்கள் வீடு தேவராயபுரம் கிராம பஞ்சாயத்தின் கீழ் வருகிறதா” என்று ஸ்டாலின் கேட்டபோது, இதுவே தெரியாதபோது, கோவையில் கிராமசபையை எப்படி நடத்த முடியும் என்று பூங்கொடி திமுக தலைவரை கடுமையாக சாடினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை BBC Tamil ஊடகமும் வெளியிட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் நடைபெற்ற 2021ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழில் செய்தி வெளியிட்டுள்ள BBC Tamil ஊடகம்
Conclusion:
நம் தேடலின் முடிவாக திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் என்று பகிரப்படும் காணொலி 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது.