Fact Check: வாகனங்கள் மீது "I Love Mohammed" ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக ஒட்டிய இளைஞர்கள் மீது காவல்துறை லத்தி சார்ஜ் செய்ததா?

குர்லாவில் போக்குவரத்தை நிறுத்தி வாகனங்கள் மீது “I Love Mohammed” என்ற வாசகத்தை வலுக்கட்டாயமாக ஒட்டிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By -  Ahamed Ali
Published on : 4 Oct 2025 11:54 PM IST

Fact Check: வாகனங்கள் மீது I Love Mohammed ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக ஒட்டிய இளைஞர்கள் மீது காவல்துறை லத்தி சார்ஜ் செய்ததா?
Claim:"I Love Mohammed" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை, குர்லாவில் வாகன ஓட்டிகளின் விருப்பமின்றி ஒட்டிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கிய காணொலி வேகமாகப் பரவி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. நாசிக்கில் பிணையில் வெளிவந்த கைதியின் விடுதலையை கொண்டாடிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியது தொடர்பான காணொலி

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி கான்பூரின் ராவத்பூர் பகுதியில் உள்ள சையத் நகரில் உள்ள ஜாபர் வாலி காலி சந்து மீலாது நபி கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டது. அதன் நுழைவாயிலில், "I Love Mohammed" என்ற வாசகங்கள் கொண்ட அலங்கார விளக்கு நிறுவப்பட்டது. இது அப்பகுதியில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டியது, இந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் நுழைவாயிலில் அதை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து காவல்துறை தலையீட்டிற்கு பின், அறிவிப்புப் பலகை இடமாற்றம் செய்யப்பட்டது.

அடுத்த நாள், வருடாந்திர மீலாது நபி ஊர்வலத்தின் போது, அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சுவரொட்டிகளை கிழித்ததாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி, துணை ஆய்வாளர் பங்கஜ் சர்மாவின் புகாரின் பேரில், உள்ளூர் காவல்துறையினர் 24 பேர் மீது மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையின் நடவடிக்கை முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. "I Love Mohammed" என்ற வாசகத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்தி இஸ்லாமியர்கள் தங்களது ஒற்றுமையை காட்டி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

இந்நிலையில், “குர்லாவில் எல்.பி.எஸ் மார்க்கில் வலுக்கட்டாயமாக போக்குவரத்தை நிறுத்தி, வாகனங்களில் "ஐ லவ் முகமது" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிய முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு மும்பை காவல்துறை "சரியான சிகிச்சை" அளிக்கிறது” என்ற கேப்ஷனுடன் இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கி சாலையில் அழைத்து செல்லக்கூடிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

Fact Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் கைதி ஒருவர் பிணையில் வெளிவந்ததை கொண்டாடிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியது தொடர்பான காணொலி என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, Prakash Gade என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலியை அக்டோபர் 1ஆம் தேதி பதிவிட்டு இருந்தார். அதில், “சிறையில் இருந்து வெளியே வந்தவர் மகிழ்ச்சியாக உள்ளார்” என்று நக்கலாக பதிவிட்டு “I Love Nashik Police” என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, News 18 ஊடகம் இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி யூடியூபில் காணொலி வெளியிட்டிருந்தது. அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், கைதி ஒருவன் சிறையில் இருந்து வெளியானதை கொண்டாடும் வகையில் அவனை அவனது ஆதரவாளர்கள் சாலையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இச்சம்பவம் தொடர்பான காணொலி வைரலானதை அடுத்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய சில இளைஞர்கள் அதே உடையுடன் செய்தியில் வரும் காணொலியிலும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Times of India வெளியிட்டுள்ள செய்தி

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி Times of India இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், அம்பாத் காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி நாசிக் மத்திய சிறையில் இருந்து கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பிணையில் வெளியானார் மகேஷ் சோனாவனே. அன்று இரவு 8 மணி அளவில் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் சாலையில் பேரணி நடத்தி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி பேரணியின் பாதையில் வருபவர்களை அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நாசிக் சாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 17 பேரை கைது செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் குர்லாவில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்களின் வாகனங்களில் “I Love Mohammed” என்ற வாசகத்தை ஒட்டிய நிகழ்வும் உண்மை என்ற செய்தி வாயிலாக தெரியவந்தது. ஆனால், அதில் யாரையும் காவல்துறையினர் கைது செய்யவோ அல்லது லத்தியால் தாக்கவோ இல்லை என்றும் தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக குர்லாவில் வாகனங்களில் “I Love Mohammed” என்ற வாசகத்தை வலுக்கட்டாயமாக ஒட்டிய இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையல்ல என்றும் உண்மையில் நாசிக்கில் பிணையில் வெளிவந்த கைதியின் விடுதலையை கொண்டாடிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கினர் என்றும் தெரியவந்தது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. நாசிக்கில் பிணையில் வெளிவந்த கைதியின் விடுதலையை கொண்டாடிய இளைஞர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியது தொடர்பான காணொலி
Next Story