போப் பிரான்சிஸ் இரு பெண்களுடன் குளியல் தொட்டியில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக முதற்கட்டமாக புகைப்படத்தை போட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்தோம். அப்போது புகைப்படம் எடிட் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, புகைப்படம் செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகைப்படத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். அப்போது, புகைப்படத்தில் இடதுபுறம் இருக்கக்கூடிய பெண்ணின் கை சிதைவடைந்து இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் இது செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை நம்மால் கூற முடிந்தது.
சிதைவடைந்து உள்ள பெண்ணின் கை
இதனை உறுதிப்படுத்தும் விதமாக செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்படும் புகைப்படங்களில் உள்ள கைகள் சிதைந்து உருவாகுவது தொடர் கதையாக இருப்பதாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பஸ்ஃபீட்நியூஸ்(BuzzFeedNews) என்ற இணையதளம், "AI-யால் உருவாக்கப்பட்ட கைகள் ஏன் மிகவும் சிதைந்துள்ளன?(மொழிபெயர்க்கப்பட்டது)" என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த மார்ச் 27ஆம் தேதி பஸ்ஃபீட்நியூஸ், "உலகை ஏமாற்றிய போப்பின் வைரல் AI படத்தை உருவாக்கியவரிடம் பேசினோம்" என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், சிகாகோவைச் சேர்ந்த பாப்லோ சேவியர்(Pablo Xavier) என்பவர் மிட்ஜர்னி(Midjourney) என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியைக் கொண்டு போப் பிரான்சிஸின் AI படங்களை உருவாக்கினார். அதனை AI Art Universe என்ற பேஸ்புக் குழுவில் பகிர்ந்ததன் மூலம் இவை வைரலானது என்று தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட போப்பின் புகைப்படங்கள்
தொடர்ந்து, AI Art Universe பேஸ்புக் குழுவில் போப் பிரான்சிஸின் புகைப்படங்களைத் தேடியபோது, போப்பின் பல்வேறு வகையான AI புகைப்படங்கள்(பதிவு 1, பதிவு 2, பதிவு 3) இருப்பது தெரியவந்தது.
Conclusion:
இறுதியாக நமது தேடலின் மூலம் பகிரப்பட்டு வரும் போப் பிரான்சிஸின் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் அது உண்மை அல்ல என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.