"தமிழ் கடவுள் முருகனுக்கு வந்த நிலையை பாருங்கள். நடு நிலை ஹிந்துக்கள் எங்கே?! திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர். முருகன் கோயிலை பள்ளி வாசலாக மாற்றி ஆக்கிரமித்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். முதலில் கோவில் சிலை திருடப்பட்டுள்ளது. சிலை இல்லாததால் பூஜை இல்லை..பூஜை இல்லாத கோயில் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று மசூதியாகி விட்டது.. ஹிந்துக்கள் ஒன்றினைந்து இதை மீட்கவேண்டும். செய்வீர்களா? அதிகம் பகிருங்கள்.. பல கோடி ஹிந்துக்களுக்கு இது சென்றடைய வேண்டும்!" என்ற தகவலுடன் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்காவின் புகைப்படத்தை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2012ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி தினமணி வெளியிட்டிருந்த கட்டுரையின் படி, "முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் நினைவாக சின்ன உமர் லெப்பை மற்றும் பெரிய உமர் லெப்பை ஆகியோரால் இந்த தர்கா பொட்டல்புதூரில் முதலில் எழுப்பப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொட்டல்புதூர் தர்காவின் அறக்கட்டளை நிர்வாகம் சார்ந்த வழக்கின் தீர்ப்பு ஒன்று India Kanoon இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "1674ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான தர்கா என்றும், அங்கு முஸ்லீம்கள் மட்டுமின்றி இந்து மற்றும் கிறிஸ்தவ பக்தர்களும் வருவதாக" கூறப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே முருகன் கோவில் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதேசமயம், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பழைமையான தர்காக்கள் மற்றும் மசூதிகள் கல் கட்டிடங்களாகவே இருக்கும், அது அந்தந்த தர்காக்கள் கட்டப்பட்ட காலத்தின் கட்டிடக்கலையைப் பொறுத்தது. இதற்கு தேங்காப்பட்டினம் மாலிக் தீனார் ஜும்மா பள்ளிவாசல் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள தர்கா இதற்கு முன்பு முருகன் கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் அந்த தர்கா 1674ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.