“திருக்குறளில் மொத்தம் உள்ள 1330 குறளையும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றல் உடைய மாணவ, மாணவிகள் இருந்தால் தெரியப்படுத்தவும். தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக ரூ.10000/ வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது ரூ.25000/ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யாரேனும் இருப்பின் தொடர்பு கொள்ளவும்” என்ற தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்று இடப்பட்டிருந்தது. அதில், “திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குக் குறள் பரிசு ரூ.10000. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் எக்ஸ் பதிவு
தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தினகரன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், அதில், “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 20.01.2023 முதல் குறள் பரிசுத் தொகையை ரூபாய் 10,000-த்திலிருந்து ரூபாய் 15,000ஆக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தினகரனில் வெளியான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதிலும், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 பரிசுத்தொகை வழங்கினார்” என்ற கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 10,000 வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது ரூபாய் 25000ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று வைரலாகும் தகவல் தவறானது. அதேசமயம், ரூபாய் 10,000மாக இருந்த பரிசுத்தொகை 15,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.