Fact Check: 'இது மட்டமான ஆட்சி ' என திமுக அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் கூறினரா? உண்மை என்ன?
By Ahamed Ali Published on 10 March 2024 5:28 PM GMTதிமுக அமைச்சர் முன்பு அரசை ஒருவர் விமர்சித்ததாக வைரலாகும் காணொலி
“ஓரளவுக்கு தான் ப்ரோ எல்லாமே..” என்ற கேப்ஷனுடன் அமைச்சர் கே.என். நேருவின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “மக்கள் அனைவரும் கோபமாக உள்ளனர்” என்று நிருபர் அமைச்சரிடம் கேட்கவே, அவர் கூறுவதை கேளுங்கள் என்று எதிரில் இருப்பவரை காட்டுகிறார் அமைச்சர். பின், “மக்கள் கோபமாக இல்லை, நீங்கள்(நிருபர்) தான் கோபமாக உள்ளீர்கள்” என்று அமைச்சர் நிருபரிடம் கூறுகிறார்.
தொடர்ந்து, நிருபரோ எதிரில் இருக்கும் நபரிடம் “நீங்கள் கோபமாக இல்லையா?” என்று கேட்கவே. அதற்கு பதிலளிக்கும் அந்த நபர், “குப்பையில் போடுங்கள் இந்த ஆட்சியை, இது மட்டமான ஆட்சி” என்று தகாத வார்த்தையுடன் பதிலளிக்கிறார். அதற்கு அமைச்சர் அந்த நபரிடம் “மிக்க நன்றி” என்று கூறுகிறார். இவ்வாறான காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய கூகுளில் இது தொடர்பாக கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “சென்னை மக்கள் கோபமாக இல்லை - கே.என்.நேரு” என்ற தலைப்பில் timesxptamil.indiatimes.com இணையதளத்தில் இக்காணொலி பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அதில், “சென்னை பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோபமாக இல்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். பெருவள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனை உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்காணொலி சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.
அக்காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, அமைச்சர் ஆய்வு செய்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிற்கான நிரந்தர தீர்வு குறித்து விவரிக்கிறார். தொடர்ந்து வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று, “மக்கள் அனைவரும் கோபமாக உள்ளனர்” என்று நிருபர் அமைச்சரிடம் கேட்கவே, அவர் கூறுவதை கேளுங்கள் என்று எதிரில் இருப்பவரை காட்டுகிறார் அமைச்சர். பின், “மக்கள் கோபமாக இல்லை, நீங்கள்(நிருபர்) தான் கோபமாக உள்ளீர்கள்” என்று அமைச்சர் நிருபரிடம் கூறுகிறார்.
தொடர்ந்து, நிருபரோ எதிரில் இருக்கும் நபரிடம் “நீங்கள் கோபமாக இல்லையா?” என்று கேட்கவே. அதற்கு பதிலளிக்கும் அந்த நபர், “வருத்தம் இருக்கு. ஆனால், கோபம் இல்லை. மழை அதிகமாக பெய்துள்ளது. ஆனால், அதே சமயம்…” என்று அந்த நபர் பதிலளிக்கிறார். அதற்குள் அமைச்சர் குறுக்கிட்டு அந்த நபரிடம் “மிக்க நன்றி” என்று கூறிவிட்டு தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.
மேலும், இணையத்தில் இருந்த தலைப்பைக் கொண்டு யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் தேடியபோது 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இதே காணொலி சமயம் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. அதிலும், இணையத்தில் இருப்பது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சருக்கு எதிரே இருந்த நபர், “வருத்தம் இருக்கு. ஆனால், கோபம் இல்லை. மழை அதிகமாக பெய்துள்ளது…” என்று கூறியதை, “குப்பையில் போடுங்கள் இந்த ஆட்சியை, இது மட்டமான ஆட்சி” என்று கூறியதாக தவறாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.