“ராமர் கோயில் - மதுரை ஆதீனம் வேதனை. ராமர் கோயில் திறப்பிற்குப் பின் தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன” என்று மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்ததாக புதிய தலைமுறை ஊடகம் நேற்று(மார்ச் 6) செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய நேற்று(மார்ச் 6) இவ்வாறான நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று புதிய தலைமுறையின் சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அப்போது, அவ்வாறான எந்த ஒரு நியூஸ் கார்டும் அன்றைய தேதியில் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மதுரை ஆதீனம் இவ்வாறு கூறினாரா என்று கூகுளில் கீவர் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, கடந்த ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு ராமநாதபுரம் கோயிலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்ததாக ஜனவரி 22ஆம் தேதி சமயம் தமிழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ராமர் கோயில் குறித்து அவர் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும், “பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இத்தகவல் போலியானது தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நியூஸ் கார்ட் போலியானது தான் என்று புதிய தலைமுறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று(மார்ச் 7) விளக்கமளித்துள்ளது.
போலி நியூஸ் கார்ட் என்று விளக்கமளித்துள்ள புதிய தலைமுறை
Conclusion:
நம் தேடலின் முடிவில் ராமர் கோயில் திறப்பிற்குப் பின் தான் நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதுரை ஆதீனம் கூறியதாக வைரலாகும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.