“சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரகாண்டிலுள்ள கர்ணபிரயாக்கிற்கு ரயில் சேவை துவங்கியது. 17 குகைகள் அதில் ஒன்று 15.1 கிமீ நீளம் 19 ஆற்றுப் பாலங்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மலையில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள குகைகளுக்கு நடுவே ரயில் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இந்த ரயில் பாதை சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ளது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்டு பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, guancha என்ற சீன ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, வைரலாகும் காணொலியில் இருப்பது சீனாவின் ஹுனான் மாகாணத்தின் Yanbodu நகரத்தில் உள்ள ரயில் பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Solo Travel Vlog என்ற யூடியூப் சேனலில், “மிக அழகான ரயில்வே Yanbodu டவுன், Cili கவுண்டி, Zhangjiajie நகரம்” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே காணொலி ஷார்ட்ஸாக வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அதே தகவலுடன் Mei Mei என்ற இன்ஸ்டாகிராம் பயனரும் இதே காணெலியை பதிவிட்டுள்ளார்.
மேலும், வைரலாகும் காணொலியில் உள்ள பகுதியை Google Earth உதவியுடன் ஒப்பிட்டு பார்த்தோம். அப்போது, இரண்டும் ஒருசேர இருப்பது தெரியவந்தது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலியில் இருப்பது சீனாவின் ரயில்வே என்று தெரியவந்தது.
125 கிலோ மீட்டர் நீளமுள்ள ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதை திட்டத்திற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளில் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தலைமை திட்ட மேலாளர் அஜித் சிங் யாதவ் தெரிவித்துள்ளதாக Economic Times 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டம் நிறைவடையும் என்றும் அதே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரகாண்டிலுள்ள கர்ணபிரயாகிற்கு ரயில் சேவை துவங்கியது என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி சீன ரயில்வேயின் உடையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.