“ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே உ.பி. இரயில் நிலையம் எரியுதாம். அவ்வளவு ராசிகார பைய… எனக்கு என்னமோ இது சங்கிகள் வேலையா தான் இருக்கும்னு தோனுது” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரயில் நிலையம் ஒன்று பற்றி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “சந்தோஷ்பூர் நிலையத்தில் பெரும் தீ விபத்து” என்ற தலைப்பில் Sangbad Pratidin என்ற யூடியூப் சேனலில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இது பழையது என்றும் சந்தோஷ்பூர் என்ற இடத்தில் நடைபெற்றது என்றும் நம்மால் கூற முடிகிறது.
Sangbad Pratidin வெளியிடப்பட்டுள்ள காணொலி
தொடர்ந்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது Deccan Herald 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள சந்தோஷ்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், The Print வெளியிட்டுள்ள செய்தியின் படி, “மாலை 5.30 மணியளவில் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது, மேலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ராமர் கோயில் திறப்பதற்கு முன்பே உத்திர பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையம் எரிவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அது மேற்கு வங்கத்தின் சந்தோஷ்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காணொலி என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.