“உங்கள் வாட்ஸ்அப்பில் எந்த எண்கள் மற்றும் குழுக்கள் இருந்தாலும், தயவுசெய்து இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்பவும், இது ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல். வைரலாகும் ஒரு வீடியோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் வாட்ஸ்அப்பில் எத்தனை எண்கள் மற்றும் குழுக்கள் இருந்தாலும், இந்த வீடியோவை தவறவிடாதீர்கள். வீடியோ வைரலாவது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிறுவர்களை ஒருவர் கம்பால் சரமாரியாக தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Al Arabiya என்ற ஊடகம் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “எகிப்தின் கெய்ரோவில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 7 குழந்தைகளை கம்பால் தாக்கியும் மிதித்தும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய காப்பகத்தின் தலைவரான ஒசாமா முகமது உத்மானிற்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து Gulf News வெளியிட்டுள்ள செய்தியில், “வைரலாகும் காணொலியை காப்பகத் தலைவர் உத்மானின் மனைவி பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட உத்மான், ஆதரவற்ற குழந்தைகளை தனது குழந்தைகளைப் போல நடத்துவதாகவும், அவர்கள் தவறாக நடந்து கொள்வதைத் தடுக்க மட்டுமே முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Observer The France 24 என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத் என்பவர் குழந்தைகளை தாக்குவதாக வைரலாகும் காணொலி மற்றும் தகவல் தவறானது என்றும் உண்மையில் இச்சம்பவம் எகிப்து நாட்டில் நடைபெற்றது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.