Fact Check: முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை அமரன் திரைப்படத்தில் நடித்தனரா; உண்மை என்ன?

அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் தாய், தந்தையாக நடித்தவர்கள் உண்மையான தாய் தந்தையர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  26 Nov 2024 12:17 AM IST
Fact Check: முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை அமரன் திரைப்படத்தில் நடித்தனரா; உண்மை என்ன?
Claim: அமரன் திரைப்படத்தில் நடித்த உண்மையான முகுந்த் வரதராஜனின் தாய் தந்தை
Fact: இத்தகவல் தவறானது. திரைப்படத்தில் நடித்த இருவரும் தொழில்முறை நடிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் தீபாவளி அன்று கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அத்திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் தாய் தந்தையாக நடித்தவர்கள் உண்மையான மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் மற்றும் தந்தை என்று அமரன் திரைப்படத்தின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் (Archive) தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அமரன் திரைப்படத்தில் முகுந்து வரதராஜனின் தாய் தந்தையாக நடித்தவர்கள் தொழில் முறை நடிகர்கள் என்பது தெரிய வந்தது.

இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய அமரன் திரைப்படத்தில் நடித்தவர்கள் குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, மேஜர் முகுந்த் வரதராஜனின் தாயாக (கீதா வரதராஜன்) கீதா கைலாசம் என்பவரும் தந்தையாக (வரதராஜன்) ராஜூ ராஜப்பன் என்பவரும் நடித்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இவர்கள் குறித்து தேடுகையில், கீதா கைலாசத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்தது. அதில், தன்னை ஒரு நடிகர் என்று குறிப்பிட்டு லப்பர் பந்து, அமரன், ஸ்டார், அங்கம்மாள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜு ராஜப்பன் குறித்து தேடியபோது, Kamala Ramanujam என்ற யூடியூப் சேனலில் ராஜு ராஜப்பனின் நேர்காணல் ஒன்று கடந்த 2023ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில் அவர் மேடை நாடக் கலைஞர் என்றும் பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனுக்கு தாய் தந்தையாக நடித்த இருவரும் தொழில் முறை நடிகர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை குறித்து தேடிய போது. அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்ட போது NDTV ஊடகம் அவரது தாய் தந்தையிடம் எடுத்த பேட்டி ஒன்றை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி NDTV யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில், இருப்பவர்களும் அமரன் திரைப்படத்தில் நடித்தவர்களும் வெவ்வேறானவர்கள் என்பது தெரியவந்தது.


முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை

Conclusion:

முடிவாக, நம் தேடலில் முகுந்த் வரதராஜனின் தாய், தந்தையாக அமரன் திரைப்படத்தில் நடித்தவர்கள் உண்மையான மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் தந்தையர் இல்லை என்பதும் அவர்கள் இருவரும் தொழில்முறை நடிகர்கள் என்பதும் தெரியவந்தது.

Claim Review:முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை அமரன் திரைப்படத்தில் நடித்தனர்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Threads
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. திரைப்படத்தில் நடித்த இருவரும் தொழில்முறை நடிகர்கள்
Next Story