13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 19ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், “இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி. உங்களுடைய பணமும் அதிகாரமும் உலகக்கோப்பையை உங்களுக்கு பெற்றுத் தரவில்லை” என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஃபாக்ஸ் கிரிக்கெட் இதனை வெளியிட்டதாக ஆங்கிலத்தில் இதே தகவல் வைரலானது தெரியவந்தது.
தொடர்ந்து, ஃபாக்ஸ் கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்தியை ஆய்வு செய்தோம். அதன்படி, வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரிக்கி பாண்டிங், “இந்தியாவுக்கு சாதகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானம், அவர்களுக்கே பாதகமாக அமைந்துவிட்டது” என்ற இந்தியா குறித்த கருத்தை மட்டுமே கூறியுள்ளார்.
மேலும், ஃபாக்ஸ் நியூஸின் எக்ஸ் பக்கத்தையும் ரிக்கி பாண்டிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஆய்வு செய்ததில் வைரலாவது போன்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்று உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கூறியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அவ்வாறாக அவர் கூறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.