காரில் இருந்து வந்து இறங்கும் நபர் சாலையோரம் தேங்கி இருக்கும் கழிவு நீரில் படுத்து புரளும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பரவி வருகிறது. அந்த நபர் வலதுசாரி ஆதரவாளர் என்றும் அவர் புரளும் இடம் மாடுகளை கட்டி போடும் இடம் என்றும் உத்தர பிரதேசத்தில் இவ்வாறான நிகழ்வு நடைபெறுவதாகவும் கூறி பரப்பி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள வலதுசாரியினரின் நிலையும் விரைவில் இவ்வாறாக மாறப்போகிறது என்றும் கூறி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலியில் இருப்பவர் நகைச்சுவை காணொலிகளை வெளியிடும் இன்ஸ்டாகிராம் பிரபலம் என்றும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி Digital Documentary என்ற யூடியூப் சேனலில் புனித் சூப்பர்ஸ்டார் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் நேர்காணல் ஷார்ட்ஸாக வெளியிடப்பட்டிருந்தது. அதில், 00:04 பகுதியில் வைரலாகும் காணொலியில் உள்ள அதே காட்சி இடம் பெற்றுள்ளது. இதனைக் கொண்டு வைரலாகும் காணொலியில் இருக்கும் நபர் புனித் சூப்பர்ஸ்டார் என்று தெரிய வருகிறது.
கிடைத்த தகவலை கொண்டு தொடர்ந்து இணையத்தில் தேடுகையில் இவர் தொடர்பாக India TV ஊடகம் 2024ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, புனித் சூப்பர்ஸ்டார் என்ற இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்று தெரியவந்தது. மேலும், இவர் தேங்கியிருக்கும் அழுக்கு குட்டையில் புரண்டு காணொலிகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகி உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரகாஷ் குமார் ஆகிய இவர் புனித் சூப்பர்ஸ்டார் பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு விதமாக நகைச்சுவை காணொலிகளை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக உத்திரபிரதேசத்தில் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் மாட்டு சாணம் நிறைந்த மாடுகளை கட்டி போடும் இடத்தில் படுத்து புரளுவதாக வைரலாகும் காணொலியில் இருப்பது புனித் சூப்பர்ஸ்டார் என்கிற இன்ஸ்டாகிராம் பிரபலம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.