1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போரின் போது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்திய ராணுவத்திற்கு உதவி புரிந்ததாக பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் "1963 இந்தியா-சீனா யுத்தத்தின்போது இராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று போர்முனையில் இந்திய ராணுவத்திற்கு உதவியாக 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயிற்சிபெற்ற தொண்டர்கள் பணியாற்றினர். உணவு, ஆயுதங்கள் எடுத்து செல்வது காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவை பணிகள் செய்தனர்" என்று பதிவிட்டு இருந்தார்.
பகிரப்பட்டு வரும் புகைப்படம்
Fact-check:
இந்நிலையில், இது குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறிய பகிரப்பட்டு வரும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பிரபல டைம் இதழ் தங்களது இணையதள பக்கத்தில், "1962-ம் ஆண்டு ராணுவப் பயிற்சியின் போது இந்தியப் படைகள்" என்ற தலைப்புடன் இதே புகைப்படத்தை பதிவு செய்து இருந்தனர். மேலும், பல்வேறு பிரபல செய்தி நிறுவனங்களும், இந்திய ராணுவப் பயிற்சியின் போது எடுத்த புகைப்படம் என்றே இதனை பதிவிட்டு இருந்தன. மேலும், அப்புகைப்படத்தில் முழு ராணுவ உடையில் அதிகாரி ஒருவரும் நின்றிருந்தார்.
அதுமட்டுமின்றி, அதில் இருக்கக்கூடிய அனைவரும் சீக்கியர்கள் அணிவது போன்ற தலைப்பாகை அணிந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. எனவே, ஆர்எஸ்எஸில் சீக்கிய பிரிவு உள்ளதா என்று தேடினோம். 1986-ம் ஆண்டு ராஷ்ட்ரிய சீக்கிய சங்கத் என்ற சீக்கியர்களுக்கான ஆர்எஸ்எஸின் துணை அமைப்பு துவக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன்மூலம், இந்தியா-சீனா போர் முடிவடைந்து 23 ஆண்டுகளுக்கு பிறகே ஆர்எஸ்எஸில் சீக்கிய பிரிவு துவக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
Conclusion:
நமது தேடலின் மூலம் சமூக வலைதளங்களில் வலதுசாரியினரால் பகிரப்பட்டு வரும் இப்புகைப்படத்தில் இருப்பது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், இதில் இருப்பது இந்திய ராணுவத்தினர் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. இதன்மூலம் வலதுசாரிகள் வதந்தியைப் பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் கூறமுடிகிறது.