“மோடி பிரதமராக இருக்கக்கூடாது - ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் விளையாடுவேனா என்று தெரியாது; உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது” என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாக நவம்பர் 21ஆம் தேதியிட்ட புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் புதிய தலைமுறை ஊடகத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ் கார்ட் உண்மையில் வெளியாகியுள்ளதா என்று தேடினோம். ஆனால், அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்பு கடந்த நவம்பர் 18ஆம் தேதி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அதில், வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இறுதிப்போட்டி முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில், “இறுதிப்போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை. குறிப்பாக கோலியும் ராகுலும் நன்றாக விளையாடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.” என்றே கூறியுள்ளார். இதனை நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாக வெளியிட்டுள்ளது.
இறுதிப்போட்டிக்கு பிறகு தனியாக ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மாறாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மட்டுமே கடந்த 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். மேலும், ரோஹித் சர்மாவின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்தபோதும் வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற எந்த ஒரு கருத்தையும் அவர் பதிவிடவில்லை. இறுதியாக, புதிய தலைமுறை ஊடகம் இச்செய்தியை வெளியிடவில்லை என்றும் அது போலி நியூஸ் கார்ட் என்றும் அறிவித்துள்ளது.
போலி நியூஸ் கார்ட் என்று அறிவித்துள்ள புதிய தலைமுறை
Conclusion:
நம் தேடலின் முடிவாக, உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் மோடி பிரதமராக இருக்கக்கூடாது என்று ரோஹித் சர்மா கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட் போலி என்றும் அவ்வாறான கருத்தை அவர் தெரிவிக்கவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.