“சீனாவில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுதான் வளர்ந்த சீனாவின் உண்மை நிலை. சீன தயாரிப்புகள் முதல் சீன விமான நிலையங்கள் வரை, சீனாவில் எதுவும் நீடித்து நிலைக்காது, அத்தனையும் டூப்ளிகேட்…” என்ற கேஷனுடன் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து கீழே விழும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில் இருக்கும் கட்டிடம் சீனாவின் விமான நிலையம் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் சீனாவில் உள்ள மால் ஒன்றில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி தொடர்பான உண்மைத்தன்மையை அறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, Chongqingல் உள்ள ஒரு மாலின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து மேலிருந்து கழிவுநீர் கீழே கொட்டுகிறது” என்ற தலைப்புடன் வைரலாகும் அதே காணொலியை Newsflare என்ற ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Newsflare வெளியிட்டுள்ள செய்தி
மேலும் அதில், ஜூலை 8ஆம் தேதி மாலை 5:00 மணியளவில், Chongqingல் உள்ள Xicheng Tiandi ஷாப்பிங் மாலின் B1 தளத்தில் உள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததில் கூரையின் துண்டுகள் மற்றும் கழிவுநீர் கீழே கொட்டியது, இதனால் அந்த இடம் முற்றிலும் சீர்குலைந்தது.
இந்த சம்பவம் அதிக மழையால் ஏற்பட்டதாகவும், இதனால் மாலின் சில பொது குழாய்களில் சேதம் ஏற்பட்டதாகவும் மால் நிர்வாகம் பதிலளித்தது. தொடர்ந்து, Longfor Chongqing Xicheng Tiandi வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவசரகால பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
அவசரகால பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு அந்தப் பகுதி மீட்டெடுக்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த மால் செயல்பாடுகள் கணிசமாக பாதிக்கப்படவில்லை என்றும் மால் ஊழியர்கள் தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக Jimu News Client என்ற சீன ஊடகமும் கடந்த ஜூலை 9ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
அதே செய்தியை வெளியிட்டுள்ள சீன மொழி ஊடகம்
Conclusion:
முடிவாக, நம் தேடலில் மழையின் காரணமாக சீனாவில் உள்ள மாலின் மேற்கூரை இடிந்து விழும் காணொலியை சீனாவின் விமான நிலையம் என்று தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.