அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் இவர் திமுக உறுப்பினர் என்று கூறி எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இச்சூழலில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், “கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், திமுக உறுப்பினர் அல்ல. அவர் திமுக அனுதாபி, ஆதரவாளர். அதனை மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் படம் எடுத்திருக்கலாம். அதிலும் தவறில்லை. அவர் யாராக இருந்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார்.
இந்நிலையில், இன்றைய (ஜனவரி 8) தேதியுடன் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன் திமுக காரன் தான்; கட்சியை விட்டு நீக்குவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் ஆர்.எஸ். பாரதி இவ்வழக்கு தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “துணைவேந்தரை நியமிக்காததால் தான், அண்ணா பல்கலைக்கழகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளுநர் தான் என்பதை, இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தந்தி டிவி இன்று (ஜனவரி 8) செய்தி வெளியிட்டுள்ளது. அதில் வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற தகவல் ஏதும் இல்லை.
தொடர்ந்து, அவரது சமூக வலைதளப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்த போதும் வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற எந்த ஒரு பதிவையும் அவர் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் நியூஸ் கார்ட்டில் உள்ள தகவல் தவறானது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்றும் அந்த நியூஸ் கார்ட் போலி என்றும் விளக்கியுள்ளது புதிய தலைமுறை ஊடகம்.
நியூஸ் கார்ட் போலி என்று விளக்கியுள்ள புதிய தலைமுறை ஊடகம்
Conclusion:
நம் தேடலின் முடிவாக அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததாக வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.