ஆர்.எஸ்.எஸ்- ஐ தடை செய்ததா கனடா அரசு?

கனடா அரசு ஆர்.எஸ்.எஸ்- ஐ தடை செய்ததாக கூறி சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  21 Sep 2023 8:40 PM GMT
ஆர்.எஸ்.எஸ்- ஐ தடை செய்ததா கனடா அரசு?

கனடா அரசு ஆர்.எஸ்.எஸ்- ஐ தடை செய்ததாக வைரலாகும் காணொலி

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததுடன், இந்திய தூதரக அதிகாரியையும் கனடா தனது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. இதனையடுத்து, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு கனடா தூதரகத்தின் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்தால், கனடா – இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், "RSS எனும் பயங்கரவாத தீவிரவாதம் முற்றிலுமாகா தடை செய்த முதல் நாடு கனடா…" என்ற தகவலுடன் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஏசியாநெட் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சிலின்(National Council of Canadian Muslims) தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பிரவுன் கனேடிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில், கனடாவில் சீக்கிய தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கு தனது கண்டனங்களை பதிவு செய்தார்.

பின்னர் பேசிய அவர், "இந்தியாவிலும், தற்போது கனடாவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப்படும் குற்றங்களில் இருந்து திசைதிருப்பும் முயற்சியாகவே இது உள்ளது. எனவே கனேடிய குடிமக்களைப் பாதுகாக்க கனடா அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இது கனடாவில் ஆர்.எஸ்.எஸ்- ஐத் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) தடை செய்வதிலிருந்து தொடங்குகிறது" என்றார். இதே கருத்தை பின்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியிருந்தார். அந்த காணொலியின் குறிப்பிட்ட பகுதிதான் தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்டீபன் பிரவுன் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து, கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் குறித்து தேடியபோது, "கனேடிய முஸ்லீம் சமூகத்தினரால் துவக்கப்பட்ட இது ஒரு சுயாதீனமான, கட்சி சார்பற்ற மற்றும் லாப நோக்கற்ற அமைப்பாகும்" என்று தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இதற்கும் கனேடிய அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இது ஒரு அரசு சாரா அமைப்பு என்றும் கூற முடிகிறது. மேலும் தேடுகையில், கனடா அரசு ஆர்.எஸ்.எஸ்- ஐ தடை செய்ததாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார் என்று தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து நேற்று(செப்டம்பர் 21) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, "இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன். அப்போது என் கவலைகளை பகிர்ந்துகொண்டேன். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்.

இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை. இந்த விஷயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்கள் சந்திப்பு

Conclusion:

நமது தேடலின் முடிவாக கனடா அரசு ஆர்.எஸ்.எஸ்- ஐ தடை செய்ததாக வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் அது அரசு சாரா கனேடிய முஸ்லீம்கள் கவுன்சிலின் தனிப்பட்ட கருத்து என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:A post with a video claiming that Canada bans RSS
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X, WhatsApp
Claim Fact Check:Misleading
Next Story