Fact Check: ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவரும் அம்பேத்கரும் பைக்கில் பயணித்தனரா? உண்மை அறிக
அம்பேத்கர் மற்றும் ஆர்எஸ்எஸின் நிறுவனரான ஹெட்கேவர் ஆகிய இருவரும் பைக்கில் பயணித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது
By Ahamed Ali
Claim:அம்பேத்கரும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவரும் ஒன்றாக பைக்கில் பயணிக்கும் புகைப்படம்
Fact:இத்தகவல் தவறானது வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. மேலும், அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் துவங்கப்படும் போது ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக போராடினார் என்பதே அறிஞர்களின் கூற்றாக உள்ளது
“அம்பேத்கருக்கும், ஆர் எஸ் எஸ் க்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு, இந்துத்துவம், இந்து தேசியம் எனும் இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை, நாக்பூரில் 1925ஆம் ஆண்டில் நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாருடன், டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவருடன் அம்பேத்கர் அமர்ந்து பைக்கில் பயணிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் புகைப்படம்
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது எனவும் தெரிய வந்தது.
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ஆய்வு செய்தபோது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதற்கான பொதுவான அறிகுறிகள் அப்புகைப்படத்தில் தென்பட்டன, மங்கலான அல்லது முழுமையற்ற முகங்கள், மற்றும் இயற்கைக்கு மாறான உடல் அமைப்புகள் காணப்பட்டன. இவற்றைக் கொண்டு இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது.
AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதற்கான பொதுவான அறிகுறிகள்
தொடர்ந்து, அப்புகைப்படத்தை Was It AI என்ற இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்கையில். இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவைத் தந்தது. மேலும், DeepFake-O-Meter என்ற இணையதளத்தில் பதிவேற்றி 8 டிடெக்டர்களைக் கொண்டு ஆய்வு செய்தோம். அதில், 6 டிடெக்டர்கள் 60% முதல் 96% வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்ற முடிவுகளை தந்தன. இதன் மூலம் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
AI இணையதள ஆய்வு முடிவுகள்
மேலும் ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில் அம்பேத்கரின் பணிகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து எழுத்தாளர் மற்றும் தலித் செயல்பாட்டாளரான புனித பாண்டியனிடம் கேட்டோம். அதற்கு, “ஆர்எஸ்எஸ் துவக்கப்படும் போது அம்பேத்கர் வெளிநாட்டு படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பி பத்திரிக்கையை துவங்கி நடத்தி மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். Bahishkrit Hitakarini Sabha என்று அமைப்பை உருவாக்குகிய அவர் முழுவதுமாக ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மேலும், 1925 முதல் 1936ஆம் ஆண்டு வரை ஒடுக்கப்பட்டவர்கள் எதனால் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தை ஆராய்ந்தார் என்று கூற முடியும். இன்றே ஆர்எஸ்எஸ் என்றால் பலருக்கும் தெரியாத நிலையில், 1925ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் பற்றி யாருக்கும் தெரியாது. அன்றைய தேதியில் சுதந்திரப் போராட்டம் தான் அனைவருக்கும் தெரியும். இத்தகைய சுதந்திரப் போராட்டத்தையே சட்டை செய்யாதவர் அம்பேத்கர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தப்பட்டபோது “Quit Hinduism” என்ற இயக்கத்தை நடத்தியவர் அம்பேத்கர்.
சைமன் கமிஷன் புறக்கணிக்கப்பட்ட போது அக்கமிஷனில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக மனு அளித்தவர். இத்தகைய சூழலில் ஆர்எஸ்எஸ்ஐ அம்பேத்கர் சட்டை செய்தார் என்றும் ஹெட்கேவருடன் நட்பு பாராட்டினார் என்பதும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. மேலும் ஆர்எஸ்எஸின் முகாமிற்கு சென்று அவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்று அம்பேத்கர் கூறியதாக கூறப்படுவதும் பொய்.
அம்பேத்கர் குறித்து 22 நூல் தொகுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் அரசால் வெளியிடப்பட்டது. இவைதான் நம்பகத்தன்மையுள்ளவை. இதைத் தாண்டி மூன்று தொகுப்புகள் உள்ளன. அதன் பெயர் Sourced material. 1920இல் வெளிநாடு சென்று விட்டு வந்த அம்பேத்கர் தலித்துகளை அணிதிரட்டி. போராட்டங்களை எல்லாம் முன்னெடுக்கும் போது உளவுத்துறை அம்பேத்கரை தினந்தோறும் உழவு பார்த்தது. அதில், அவர் எங்கே சென்றார் அவர் பேசக்கூடியவை எந்த செய்தித்தாள்களில் வெளியானது என்பது போன்ற தரவுகள் Sourced materialலில் உள்ளன. இதனை மூன்று தொகுப்புகளாக அரசாங்கம் வெளியிட்டுள்ளன. அதில் ஒன்று என்னிடம் உள்ளது. அதிலும் இது போன்ற (வைரலாகும் தகவல்) எந்த ஒரு செய்தியும் இடம்பெறவில்லை.
எனவே, அம்பேத்கரை தனக்கானவராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர் அதில் எந்த உண்மையையும் கிடையாது. அப்படி உண்மை என்றால் அவரது கொள்கைகளை விவாதிக்க வேண்டும். இவர் இந்து மதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்பது போன்ற கட்டுக் கதைகளை வெளியிடுகின்றனர் (வலதுசாரிகள்) ஆனால் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் இல்லை என்று Anand Teltumbde என்பவர் “Ambedkar on Muslims” என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.
இத்தகைய புத்தகங்களை எல்லாம் அவர்கள் (வலதுசாரிகள்) வாசிப்பதில்லை. போற போக்கில் அம்பேத்கர் குறித்து ஒரு பொய்யை கட்டவிழ்த்து விட்டு செல்கின்றனர். இப்போது, AI தொழில்நுட்பம் வந்துள்ளதால் அது மிகவும் மோசமாகி உள்ளது” என்று விரிவான விளக்கத்தை அளித்தார்.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் ஆர்எஸ்எஸின் நிறுவனர் ஹெட்கேவரும் அம்பேத்கரும் பைக்கில் பயணித்ததாக வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், 1925ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் துவக்கப்படும் போது அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடுபட்டார் என்கின்றனர் அறிஞர்கள்.