மிசோரம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், "காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிய அருமையான காட்சி." என்ற ஏளனமான கேப்ஷனுடன் இருவர் அடிதடியில் ஈடுபடும் காணொலியை வலதுசாரியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "கருத்து வேறுபாடு காரணமாக பாஜக எம்.எல்.ஏவை காலணியால் தாக்கிய பாஜக எம்.பி." என்ற தலைப்பில் Storypick கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இத்தகவலைக்கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2019ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி வைரலாகும் காணொலியுடன் NDTV செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, "உத்தரபிரதேசத்தில் உள்ள சந்த் கபீர் நகரில் நடந்த பாஜக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.பி. ஷரத் திரிபாதி, அக்கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் பாகேலை தனது ஷூவால் தாக்கினார்.
சாலை கட்டுமானப்பணிக்கான அடிக்கல்லில் எம்.பி. திரிபாதியின் பெயர் எம்.எல்.ஏ பாகேலின் தலையீடு காரணமாக இடம்பெறவில்லை. இதனால் திரிபாதி, பாகேல் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இறுதியாக, கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்" என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தி பிபிசி இந்தி ஊடகத்தின் யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பிபிசி இந்தி வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
நம் தேடலின் முடிவாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதாக வைரலாகும் காணொலி உண்மையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட அடிதடி தொடர்பான காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.