“மண்டியிட்டு மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒன்றும் ராகுல் "சாவர்க்கர்" அல்ல! நான் ராகுல் "காந்தி" ராகுல் காந்தி ~அவன் கெடக்குறான்! நீ சாவர்க்கர் போட்டோவ மாட்டு -கர்நாடக காங்கிரஸ் அரசு இடம்: Majestic Metro Station, Karnataka” என்ற கேப்ஷனுடன் கர்நாடக மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் புகைப்படத்தை வைத்துள்ளது காங்கிரஸ் அரசு என்று கூறி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இது குறித்த உண்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி நியூஸ் 18 கன்னடம் வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் புகைப்படத்தை வைத்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், ஏசியிநெட் கன்னடம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. சந்திரசேகர் ஆசாத் மற்றும் உதம் சிங்குடன் சாவர்க்கரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவின் அமீர் அஹமது சர்க்கிலில் வைக்கப்பட்ட சாவர்க்கர் புகைப்படம் அகற்றப்பட்டு பெரும் பதற்றமானதை அடுத்து இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இச்சூழலில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஆரக ஞானேந்திரா அனைவரும் அமைதிகாக்குமாறு கூறியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற போது, கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த ஆரக ஞானேந்திரா பாஜகவைச் சேர்ந்தவர். மேலும், அச்சமயம் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மே 20ஆம் தேதி தான் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
முடிவாக, காங்கிரஸ் ஆட்சியில் கட்நாடகாவின் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சாவர்க்கர் புகைப்படம் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் உண்மையில், பாஜக ஆட்சியின் போது வைக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.