"சிறிய வேண்டுகோள்: தயவு செய்து உங்கள் வாட்ஸ்அப் குழுவில் இந்த செய்தியை பகிரவும்.., ஏனெனில் இது நமது ராணுவத்திற்கு உதவும் ஒரு சிறிய முயற்சியாகும்.. Bisleri (பிஸ்லெரி)மற்றும் Aquafina (அக்வாபினா) போன்ற குடி நீர் தயாரிக்கும் கம்பெனிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது. இந்த குடி நீரை நாம் பணம் கொடுத்து வாங்கினால்...அந்த பணம் இந்தியாவிலிருந்து இருந்து வெளி நாடுகளுக்கு செல்கிறது.
இந்திய ராணுவப் பணியாளர்களின் ஒரு சிறிய வேண்டுகோள்:... பயணத்தின் போது அல்லது கடைகளுக்கு ஹோட்டலுக்கு செல்லும்போது "சேனா ஜல் (ராணுவ குடி நீர்) என கேட்டு வாங்குங்கள்...இந்த சேனா ஜல் (ARMY WATER) கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் (மொத்தமாக கூட) கிடைக்கும். இந்திய ராணுவத்தின் ராணுவ மனைவிகள் நல சங்கம் சேனா ஜல்லை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை இறந்த ராணுவ ஜெனரல் விபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் தொடங்கப்பட்டுள்ளது… சேனா ஜல் விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் ராணுவ நலக் குழுவுக்கு அனுப்பப்படுகிறது. தியாகிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக பணம் பயன்படுத்தப்படுகிறது! " எனக்கூறி தண்ணீர் பாட்டிலின் விலைப்பட்டியலுடன் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய வைரலாகும் தகவல் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "இந்திய ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கம்(AWWA) சேனா ஜல் எனும் குடிநீர் பாட்டில் தயாரித்து விற்பனை செய்யும் முயற்சியை தொடங்கியதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயை போரில் கணவனை இழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளுக்கும், இராணுவத்தினரின் குடும்பங்களும் உதவப் பயன்படுத்துவதாகக்" 2018ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, "சேனா ஜல் குடிநீர் பாட்டில் முயற்சி 2017ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டதாக" கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தண்ணீர் பாட்டில்களின் விற்பனை குறித்து எந்த விவரமும் அதில் இல்லை. தொடர்ந்து தேடுகையில், நியூஸ் 18 இந்தி 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, "சேனா ஜல் தண்ணீர் பாட்டில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, ஆர்மி வாட்டர் பாட்டிலை சந்தைக்கு சென்று வாங்க முடியாது. இது ராணுவ பயன்பாட்டிற்கானது. பொதுமக்களுக்கான வணிக விற்பனைக்கு இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக, சேனா ஜல் எனும் குடிநீர் பாட்டில் முயற்சியை ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச்சங்கம் 2017ல் தொடங்கியது உண்மை. ஆனால், அது மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யப்படவில்லை என்றும் ராணுவ பயன்பாட்டிற்கானது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.