"அமெரிக்க வெள்ளைமாளிகையில் ஸ்ரீ ருத்ர ஸ்தோத்ரம் பாராயணம் அமெரிக்கர்களால் செய்யப்படும் அழகை பாருங்கள். ஓம் நமசிவாய" என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Hindu Purohit Sang என்ற ஃபேஸ்புக் பக்கம் "குரோஷியாவில் 400க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களால் நிகழ்த்தப்பட்ட ஸ்ரீ ருத்ரம் மற்றும் சமகம். உலக அமைதிக்காக ஐரோப்பிய வேத சங்கம் ஐரோப்பாவின் பல இடங்களில் இதை நிகழ்த்தியது" என்ற தலைப்பில் காணொலி ஒன்றை 2018ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பதிவிட்டுள்ளது. இதே தலைப்புடன் Svns Bhakthi Channel என்ற யூடியூப் சேனலும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Hindu Purohit Sangன் ஃபேஸ்புக் பதிவு
தொடர்ந்து, தகவலின் அடிப்படையில் கூகுளில் தேடினோம். அப்போது, vedaunion.org என்ற இணையதளத்தில் இத்தகவல் பதிவாகியுள்ளது. அதன்படி, "ருத்ரம் 11 என்பது வேத யூனியன் திட்டமாகும். இது ஐரோப்பாவில் 11 வெவ்வேறு இடங்களில் ஸ்ரீ ருத்ரம் சமகம் கீர்த்தனைகளை 11 முறை தொடர்ந்து பாடுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த அற்புதமான பாடல்கள் பல்வேறு இடங்களில் 121 முறை பக்தர்களால் உச்சரிக்கப்படும். 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் பதினொன்றாவது ருத்ரம் பாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது" என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் அதே இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், வைரலாகும் காணொலியில் மைக்குடன் வேதம் ஓதும் நபரின் முகச் சாயலும் இணையத்தில் உள்ள புகைப்படத்தில் வேதம் ஓதுபவரின் முகச் சாயலும் முழுவதுமாக ஒத்துப்போகிறது.
Conclusion:
நமது தேடலில் முடிவாக குரோஷியாவில் நடந்த வேதம் ஓதும் நிகழ்வினை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாகக் கூறி தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.