இமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி டெல்லிக்குச் சென்றபோது தன்னை அறைந்ததாகக் குற்றம் சாட்டினார்.
விவசாயிகள் போராட்டத்தின் போது பஞ்சாபில் பெண்கள் குறித்து கங்கனா ரனாவத் கூறிய கருத்தின் காரணமாக பெண் அதிகாரி கங்கனாவை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரி குல்விந்தர் கவுர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் அறையப்பட்ட கன்னம் என்று கன்னத்தில் கை விரல்கள் பதிந்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Ads of the world என்ற இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருந்தது. அதில், “Slap Two என்ற தலைப்பில் இந்த தொழில்முறை பிரச்சாரம் மே 30, 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த பிரச்சாரம் மருந்துத்துறையுடன் தொடர்புடையது. இது சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது. அதில், இருப்பவர் கங்கனா ரனாவத் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இதே புகைப்படத்துடத்தை Cool Marketing Thoughts என்ற இணையதளமும் 2006ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில், Baygon என்ற கொசு விரட்டி தொடர்பான விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அப்புகைப்படங்களில் இருக்கும் மூவரும் அறைந்த கை விரல்கள் பதியப்பட்ட கன்னத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கங்கனா ரனாவத்தின் அறையப்பட்ட கன்னம் என்று கன்னத்தில் ஐந்து விரல் பதிந்தது போன்று வைரலாகும் புகைப்படம் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் அதில் இருப்பவர் கங்கனா ரனாவத் இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.