நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளம் பகுதியில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், மாநாடு நடத்தப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தண்ணீர் கேன்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படத்துடன் தகவல் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படம் சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிக அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, இதே புகைப்படம் TN Explorer என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) பதிவிடப்பட்டிருந்தது. அதில், “சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் எத்தனை பிளாஸ்டிக் பாட்டில்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு முதற்கட்டமாக வைரலாகும் புகைப்படம் வேறு பகுதியைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சி
தொடர்ந்து, சின்னக் கல்லார் அருவி குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது இந்த அருவி பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருப்பது தெரியவந்தது. மேலும், வைரலாகும் புகைப்படத்தை கூர்ந்து ஆய்வு செய்கையில் அதில் “பொள்ளாச்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றைக் கொண்டு வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி தான் என்று உறுதியாகிறது.
வைரலாகும் புகைப்படத்தில் உள்ள "பொள்ளாச்சி"
Conclusion:
முடிவாக, நம் தேடலில் நாம் தமிழர் கட்சியின் மரங்கள் மாநாடு நடைபெற்ற இடத்தில் தண்ணீர் கேன்கள் குவிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியின் புகைப்படம் என்று தெரியவந்தது.