மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆடையின்றி சாலையில் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிரச் செய்துள்ளது. இந்நிலையில், "மோடியிடம் நீதி கேட்பேன் என்று போராட்ட குழந்தைக்கு நேர்ந்த கெதியை பாருங்கள் மக்களே இதுக்கு மேலயும் மூடநம்பிக்கையோடு நீங்கள் இருந்தாள் மனிதர்கள் அல்ல கொஞ்சம் சிந்தியுங்கள்…" என்று கூறி 3 நிமிடமும் 17 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி Myanmar Now என்ற ஊடகம் வைரலாகும் காணொலியில் இருக்கும் புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "NUG அரசாங்கத்தின் செயலாளர் Naing Htoo Aung கூறுகையில், இச்சம்பவம் ஜூன் மாதம் மியான்மரின் தமு என்ற பகுதியில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராணுவ எதிர்ப்பு People Defense Forcesன்(PDF) தமு மாவட்ட பகுதியின் 4வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்றார்.
இறந்தவர் 25 வயதான Aye Mar Tun என்று கண்டறியப்பட்டுள்ளார். மேலும், Tamu Township PDFன் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, கொல்லப்பட்ட பெண் மியான்மர் ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் ஆயுதம் ஏந்திய Pyu Saw Htee போராளிக் குழுவின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டினார். 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் தமு PDFன் 17 வயது உறுப்பினரைக் கைது செய்து கொலை செய்த சம்பவத்தில் அப்பெண் ஈடுபட்டதாக அவர் கூறினார்" என்று கூறப்பட்டுள்ளது. இதனை Mizzima, Irrawaddy உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக NUG அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "இச்சம்பவம் குறித்து விரைந்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
NUG அரசாங்கத்தின் ஃபேஸ்புக் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் காணொலியில் நடைபெற்ற சம்பவம் மணிப்பூரில் நடைபெற்றது இல்லை என்றும் அது மியான்மரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.