Fact Check: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்றாரா சபாநாயகர் அப்பாவு?
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்று சபாநாயகர் அப்பாவு கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 22 Jan 2025 11:34 PM ISTClaim: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனை என் தம்பி என்று கூறிய சபாநாயகர் அப்பாவு
Fact: இத்தகவல் தவறானது. உண்மையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வேறொரு ஞானசேகரன் என்பவரை கையிட்டு காட்டி ‘என் தம்பி’ என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, “கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், திமுக உறுப்பினர் அல்ல. அவர் திமுக அனுதாபி, ஆதரவாளர். அதனை மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் படம் எடுத்திருக்கலாம். அதிலும் தவறில்லை. அவர் யாராக இருந்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்றார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்நிலையில், "என் தம்பி ஞானசேகரன் வழக்கு" பாலியல் குற்றவாளியை சபாநாயகர் பேச்சா இது? இதுக்கு மேல ஒரு கேடுகெட்ட ஆட்சிய பார்க்க முடியாது” என்ற கேப்ஷனுடன் சபாநாயகர் அப்பாவு பேசிய காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில் பேசும் அவர், “தற்போது தான் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை தம்பி ஞானசேகரின் வழக்கை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது” என்கிறார்.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் சபாநாயகர் அப்பாவு அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஞானசேகரன் என்பவரையே குறிப்பிட்டு இவ்வாறு கூறுகிறார் என்று தெரியவந்தது.
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “இந்தியா வென்றது நூல் வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு” என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டுள்ள நேரலைக்காணொலி அதன் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருந்தது.
அதில் 10:53 பகுதியில் பேசும் அப்பாவு, “எனக்கு ஒரு நண்பர் சால்வை அணிவித்தார். அவரது பெயர் என்னவென்று கேட்டேன். ஞானசேகரன் என்றதும் அப்படியே அதிர்ந்துவிட்டேன். அவர்(கைதான ஞானசேகரன்) எப்படி வந்துவிட்டார் எனப் பார்த்தேன். அதற்கு, “ஐயா நான் வேறு ஞானசேகரன்” என்றார். அப்படிப்பட்ட தம்பி ஞானசேகரன் அவர்களே” என்கிறார். இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை அவரது பாணியில் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், “தற்போது தான் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை தம்பி ஞானசேகரின் வழக்கை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது” என்று கூறிய அப்பாவு தனக்குச் சால்வை அணிவித்த ஞானசேகரனை கை காட்டி “எனது தம்பி” என்கிறார். தொடர்ச்சியாக, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்பான வழக்கை மேற்கோள் காட்டுகிறார்.
அதே காணொலியின் 37:50 பகுதியில், பேரவைத் தலைவர் அடுத்தகட்ட பணிகளுக்காக விடைபெறுகிறார். ஆனால், அவர் இருக்கும் போதே பேசியதற்கு தம்ப்நெய்லும் போட்டுவிட்டனர். அவர் தம்பி என்று கீழே இருப்பவரை கை காட்டி விட்டு ஞானசேகரன் என்று அவரைக் கூறுகிறார்” என்று தெளிவாக விளக்குகிறார் பத்திரிக்கையாளர் இந்திரகுமார் தேரடி. தொடர்ந்து, “இது சர்ச்சை ஆகும் என்று தெரியும் அதனால் தான் இப்போதே விளக்குகிறோம்” என்றும் கூறுகிறார்.
இதுகுறித்து நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைரலாகும் தகவல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, “நான் சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாக்கி விட்டனர்” என்று பேசியதாக புதிய தலைமுறை ஊடகம் இன்று (ஜனவரி 22) செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கம் அளித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ‘இந்தியா வென்றது’ புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் பத்திரிக்கையாளர் நிரஜ்ஜன் குமார், நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.ஐ.சி ஏஜெண்டான ஞானசேகரனை கையிட்டு காட்டி சபாநாயகர் தம்பி என்று கூறினார் என குறிப்பிட்டுள்ளார்.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சபாநாயகர் அப்பாவு அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்று கூறியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர் சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஞானசேகரன் என்பவரையே குறிப்பிட்டு காட்டினார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.