சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு, ஆந்திரா உட்பட ஐந்து மாநில அரசு அதிகாரிகளுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து, “அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த நவம்பர் 21ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளிக்காமல் சென்றதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “அதானி விவகாரம் குறித்த கேள்விக்கு கடுப்பான ஸ்டாலின்” என்ற தலைப்பில் Reflect News Tamil கடந்த நவம்பர் 25ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் காணொலி வெளியிட்டிருந்தது. அதில், டெல்டா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு. க. ஸ்டாலின். தொடர்ந்து, மழை பாதிப்பு, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பாகவும் பதிலளித்தார்.
இறுதியாக, 1:04 பகுதியில், “அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டில் அதானியுடன் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பவே முதல்வர் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து செல்கிறார். உடனடியாக 1:09 பகுதியில் மீண்டும் வந்து அக்கேள்விக்கு பதிலளிக்கும் மு. க. ஸ்டாலின், “துறை அமைச்சரே இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நீங்கள் இதனை ட்விஸ்ட் செய்ய வேண்டாம்” என்கிறார். தொடர்ந்து, “பாமக நிறுவனர் ராமதாஸ் அதானி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்…” என்று செய்தியாளர் கேட்கவே, அதற்கு, “அவருக்கு வேறு வேலை இல்லை தினமும் அறிக்கை விட்டுக் கொண்டுதான் இருப்பார். அதற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கிறார். இதன் மூலம் முதல்வர் அதானி விவகாரம் தொடர்பாக கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அதானி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் செல்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்றும் உண்மையில் அவர் அக்கேள்விக்கு பதிலளிக்கிறார் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.