Fact Check: சர்க்கரை, எழுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் புற்றுநோயை குணப்படுத்துமா? உண்மை அறிக

மருத்துவர் குப்தா புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று வழிமுறைகள் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 12 April 2025 8:58 PM IST

Fact Check: சர்க்கரை, எழுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் புற்றுநோயை குணப்படுத்துமா? உண்மை அறிக
Claim:புற்றுநோயை குணப்படுத்த மருத்துவர் குப்தா கூறிய மூன்று வழிமுறைகள்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் தகவல் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

“புற்றுநோய் ஆபத்தான நோயல்ல!

டாக்டர். குப்தா கூறுகிறார், "அலட்சியத்தால் தவிர யாரும் புற்றுநோயால் இறக்கக்கூடாது." இந்த நடவடிக்கைகளை எடுக்கவும்:-

(1) முதல் படி சர்க்கரை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். உங்கள் உடலில் சர்க்கரை இல்லாமல், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவே இறக்கின்றன.

(2). இரண்டாவது படி ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து 1-3 மாதங்கள் சாப்பிடுவதற்கு முன் காலையில் குடித்து வர புற்றுநோய் மறைந்துவிடும். மேரிலாண்ட் மருத்துவ ஆராய்ச்சியின் படி, வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் கீமோதெரபியை விட 1000 மடங்கு சிறந்தது, வலிமையானது மற்றும் பாதுகாப்பானது.

(3). மூன்றாவது படியாக 3 டேபிள் ஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை காலை, இரவு குடித்து வந்தால் புற்றுநோய் மறையும்.

சர்க்கரையை தவிர்ப்பது உட்பட மற்ற இரண்டு சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சொல்லுங்கள், புற்றுநோயால் இறப்பது யாருக்கும் அவமானம் அல்ல; உயிர்களை காக்க பரவலாக பகிரவும்..” என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல்கள் தவறானவை என்று தெரியவந்தது.

சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதன் மூலம் உடலில் சர்க்கரை இல்லாமல், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவே இறக்கின்றனவா என்பது குறித்து கூகுளில் தேடினோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி Cancer Research UK என்ற இணையதளத்தில் இதுதொடர்பாக கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், புற்றுநோய் செல்கள் பொதுவாக விரைவாக வளரும், வேகமான விகிதத்தில் பெருகும், அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதாவது அவற்றுக்கு நிறைய குளுக்கோஸ் தேவை.


Cancer Research UK வெளியிட்டுள்ள செய்தி

சர்க்கரை புற்றுநோயைத் தூண்டுகிறது என்ற கட்டுக்கதை இங்குதான் பிறந்தது: புற்றுநோய் செல்களுக்கு நிறைய குளுக்கோஸ் தேவைப்பட்டால், நம் உணவில் இருந்து சர்க்கரையை நீக்குவது புற்றுநோய் வளர்வதைத் தடுக்க உதவுமா? துரதிர்ஷ்டவசமாக, அது அவ்வளவு எளிதல்ல. நமது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கும் குளுக்கோஸ் தேவை. மேலும் புற்றுநோய் செல்களுக்குக் கொடுக்காமல், ஆரோக்கியமான செல்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸைக் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அதனிடம் நம்மால் கூற முடியாது.

மேலும், புற்றுநோய் செல்களுக்கு அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் நிறைய தேவை; அவை விரும்பும் சர்க்கரை மட்டுமல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புற்றுநோய் செயல்கள் இறந்துவிடும் என்பது தவறான கருத்து என்பது தெரிய வந்தது.

சூடான எலுமிச்சை நீரைக் குடிப்பதால் புற்றுநோயைத் தடுக்க முடியுமா என்று தேடுகையில், “எலுமிச்சை புற்றுநோயைத் தடுக்குமா?” என்ற தலைப்பில் வாஷிங்டனின் தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம் இதுகுறித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன்படி, “எலுமிச்சை அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிரான நிரூபிக்கப்பட்ட தீர்வு மற்றும் எலுமிச்சை கீமோதெரபியை விட 10,000 மடங்கு வலிமையானவை என்ற கூற்றுக்கள் நிச்சயமாக தவறானவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள கட்டுரை

மூன்று டேபிள் ஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை காலை, இரவு குடித்து வந்தால் புற்றுநோய் குணமாகுமா என்று ஆய்வு செய்தோம். இது குறித்து நாம் கூகுளில் தேடியபோது, அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான தேசிய மருத்துவ நூலகத்தில் உள்ள “கல்லீரல் மற்றும் வாய் புற்றுநோய் செல்களில் Virgin Coconut oil-ன் புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாடு” என்ற தலைப்பிலான ஒரு ஆய்வுக் கட்டுரையை ஆய்வு செய்தோம். அக்கட்டுரையில், விஞ்ஞானிகள் சில புற்றுநோய் செல்களில் பல்வேறு வகையான தேங்காய் எண்ணெயைக் கொண்டு சோதனைகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு புற்றுநோய் செல் வரிசையும் Virgin Coconut Oil (VCO), Pure Coconut Oil (PCO) மற்றும் Fractionated Coconut Oil (FCO) ஆகியவற்றின் வெவ்வேறு செறிவுகளுடன் சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில், விஞ்ஞானிகள் Virgin Coconut Oil (VCO), Pure Coconut Oil (PCO) மற்றும் Fractionated Coconut Oil (FCO) ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறனைக் கொண்டுள்ளன என்றும் புற்றுநோய்க்கு, குறிப்பாக கல்லீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், புற்றுநோய் செல்களில் விளைவை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் கண்டறிந்த தேங்காய் எண்ணெய் வகை, நமது வீடுகளிலும் சந்தைகளிலும் கிடைக்கும் உண்ணக்கூடிய தேங்காய் எண்ணெய் அல்ல, மாறாக ஆராய்ச்சிக்காக அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஆகும். மேலும், இந்த ஆராய்ச்சி, மனித சோதனைகளுக்குப் பிறகு பெறப்பட்ட முடிவுகள் அல்ல, ஒரு அறிவியல் ஆய்வகத்தின் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் புற்றுநோய் செல்களில் நேரடியாக செய்யப்பட்ட ஒரு சோதனையின் முடிவாகும்.


NCBI வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

முடிவாக, நம் தேடலில் புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று வழிமுறைகள் என்று மருத்துவர் குப்தா கூறியதாக வைரலாகும் தகவல் அனைத்தும் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:புற்றுநோயை குணப்படுத்த மூன்று வழிமுறைகள் என்று மருத்துவர் குப்தா கூறிய தகவல்கள்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் தகவல் உண்மை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
Next Story