"இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்றுள்ளார். ஆனால், போட்டோவில் இருப்பது அதானி… எதிர்கால பிரதமராக இருக்குமோ.. சன் நியூஸ் கணிப்பு" என்று பேஸ்புக்கில் சன் நியூஸ் கார்டை ஒருவர் பதிவு செய்திருந்தார். அதே நியூஸ் கார்டை பலரும் தங்களது பக்கத்தில் நகைச்சுவையாக பதிவு செய்திருந்தனர். அந்த நியூஸ் கார்டில், "ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, டோக்யோ சென்றடைந்தார் பிரதமர் மோடி!" என்று கூறப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியின் தலைக்கு பதிலாக கெளதம் அதானியின் தலையை வைத்து மார்ஃபிங் செய்து சன் நியூஸ் வெளியிட்டதாக இந்த நியூஸ் கார்டு பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படம்
Fact-check
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முயற்சித்தோம். அதன்படி, கடந்த ஜூலை 8-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய போது ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஷின்சோ அபேவிற்காக நேற்று(செப். 27) ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் அரசு மரியாதையுடன் நடைபெற்ற நினைவுச் சடங்கில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் டோக்கியோ சென்றார்.
சன் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்ட்
இந்நிலையில், பிரதமர் மோடி ஜப்பான் சென்றது தொடர்பாக அவருடைய புகைப்படத்துடன், "ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, டோக்யோ சென்றடைந்தார் பிரதமர் மோடி " என சன் நியூஸ், நியூஸ் கார்ட் வெளியிட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டில் இருந்த பிரதமர் மோடியின் தலைக்கு பதிலாக அதானி குழுமத்தின் நிறுவன தலைவரான கௌதம் அதானியின் தலையை மார்ஃபிங் செய்து படத்தை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது தெரிய வந்தது. இச்சூழலில், போட்டோ ஃபோரன்சிக் முறையில் பகிரப்பட்டு வந்த புகைப்படத்தை ஆய்வு செய்த போது, அது மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதியானது.
Conclusion:
இறுதியாக, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடி குறித்த நியூஸ் கார்டில் கௌதம் அதானியின் தலையை மார்ஃபிங் செய்தது சன் நியூஸ் செய்தி நிறுவனம் இல்லை என்பதை அறிய முடிகிறது. மேலும், இதனை சன் நியூஸ் செய்தி நிறுவனமே எடிட் செய்து வெளியிட்டதாக கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.