"துபாயில் நடைபெற்ற, பெண்களுக்கான மல்யுத்த போட்டியில், பாகிஸ்தான் வீராங்கனை வெற்றி பெற்றார். பின் அவர், என்னோட போட்டியிட எந்த இந்தியப் பெண்ணும் தயாரா என்று சவால் விட்டுள்ளார். அப்போது, பார்வையாளர் பகுதியில், மல்யுத்த போட்டியைக் காண வந்திருந்த, துபாயில் வசிக்கும், தூத்துக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் கையை உயர்த்தி, போட்டிக்கு தயார் எனக் கூறி, மேடைக்கு வருகிறார். பின்னர் நடந்ததை நீங்களே பாருங்கள்.!! பாரத் மாதா கீ ஜெய்.." என்ற கேப்ஷனுடன் 2 நிமிடமும் 46 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, CWE India என்ற யூடியூப் சேனல், "KAVITA accepted the open challenge of BB Bull Bull." என்ற தலைப்பில் 2016ஆம் ஆண்டு ஜூன் 13ம் தேதி தற்போது வைரலாகும் காணொலியை வெளியிட்டுள்ளது.
CWE India யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள காணொலி
தொடர்ந்து, இதில் உள்ள மல்யுத்த வீராங்கனைகள் குறித்து கூகுளில் தேடுகையில், மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள வீராங்கனை அரியானா மாநிலம் ஜிந்து மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா தலால் என்பது தெரியவந்தது. இவர் Continental Wrestling Entertainment என்ற இந்திய மல்யுத்த நிறுவனத்தில் மல்யுத்த வீரர் கிரேட் காலியிடம் பயிற்சி பெற்று World Wrestling Entertainment நிறுவனத்தில் மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கருப்பு நிற ஆடை அணிந்துள்ள வீராங்கனையும் இந்தியாவைச் சேர்ந்த முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனையான சரப்ஜித் கவுர் என்கிற பிபி புல்புல் என்பதும் தெரியவந்தது.
Conclusion:
தேடலின் முடிவாக நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வைரலாகும் காணொலியில் இருக்கும் இருவருமே இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் என்பதும், அவர்களில் யாருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பது உறுதியாகிறது.