Fact Check: உதயநிதி ஸ்டாலின்: தான் ஒரு கிறிஸ்தவன் என்று பெருமையுடன் கூறியதன் உண்மை பின்னணி!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு கிறிஸ்தவன் என்றும் அதற்காக பெருமைப்படுவதாகவும் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  19 Dec 2024 6:09 PM IST
Fact Check: உதயநிதி ஸ்டாலின்: தான் ஒரு கிறிஸ்தவன் என்று பெருமையுடன் கூறியதன் உண்மை பின்னணி!
Claim: நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்வதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின்
Fact: இத்தகவல் தவறானது. அவர் மத நல்லிணக்க உணர்வோடு பேசியதை தவறாக பரப்பி வருகின்றனர்

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், ”நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன், இந்து என்று அழைத்தால் நான் இந்து, முஸ்லிம் என்று அழைத்தால் நான் ஒரு முஸ்லிம். எனக்கென்று ஜாதியும் மதமும் கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்” என்றார். தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக இதனை அன்றே வலதுசாரியினர் தவறாக திரித்து பரப்பி வந்தனர்.

இந்நிலையில், “நான் ஒரு கிறிஸ்டியன்..! உதயநிதி பெருமிதம்.

எங்கு பார்த்தாலும் நட்சத்திரம் ஜொலிக்கிறது..! ஒட்டு மொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்த கூடிய விழா கிறிஸ்துமஸ் தான்.. இந்த விழானா எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.. சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நிகழ்சியிலேயே சொன்னேன் நானும் கிறிஸ்டியன்தான் என்று.. இன்று மீண்டும் சொல்கிறேன்.. பெருமையோடுசொல்கிறேன்.. நானும் ஒரு கிறிஸ்டியன் தான்..” என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக மீண்டும் சமூக வலைதளங்களில் (Archive) தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறாக திரித்து பகிரப்படுவது தெரியவந்தது. உண்மையில், அவர் மத நல்லிணக்க உணர்வோடு பேசியதை தவறாக திரித்து பரப்பி வருகின்றனர்.

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, பாலிமர் செய்தி நேற்று ( டிசம்பர் 18) இது தொடர்பாக முழு நீள காணொலியை யூடியூபில் வெளியிட்டிருந்தது. அதில் 1:00 பகுதியில் பேசும் உதயநிதி ஸ்டாலின், “சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, “நானும் ஒரு கிறிஸ்டியன் தான்” என்று பெருமையாகக் கூறினேன். உடனே உங்களுக்கு தெரியும் பல சங்கிகளுக்கு பயங்கர வயிற்று எரிச்சல். நான் இன்று மீண்டும் உங்கள் முன்பாக சொல்கிறேன் அதை சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

நானும் ஒரு கிறிஸ்தவன் தான். நீங்கள் என்னை கிறிஸ்டியன் என்று நினைத்தால் கிறிஸ்டியன், நீங்கள் என்னை முஸ்லிம் என்று நினைத்தால் நான் முஸ்லிம், நீங்கள் என்று இந்து என்று நினைத்தாலும் இந்து தான். ஏனென்றால் நான் எல்லோருக்கும் பொதுவானவன் எப்போதும் அப்படித்தான் இருப்பேன்.

எல்லா மதங்களுக்கும் அடிப்படையே அன்புதான். எல்லார் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் சொல்லித் தருகின்றன. ஆனால், அதே மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்கள்தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவார்கள்” என்றார். தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து தேடுகையில் இது கோவையில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ SPC பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் நேற்று (டிசம்பர் 18) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா என்பதும் அதில், உதயநிதி ஸ்டாலின் பேசியதும் தெரியவந்தது. இதுகுறித்த பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Conclusion:

முடிவாக நம் தேடலில், நானும் ஒரு கிறிஸ்தவன் தான். நீங்கள் என்னை கிறிஸ்டியன் என்று நினைத்தால் கிறிஸ்டியன், நீங்கள் என்னை முஸ்லிம் என்று நினைத்தால் நான் முஸ்லிம், நீங்கள் என்று இந்து என்று நினைத்தாலும் இந்து தான். ஏனென்றால் நான் எல்லோருக்கும் பொதுவானவன் என்று மத நல்லிணக்க உணர்வோடு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கிறிஸ்தவத்திற்கு மட்டும் கூறியது போன்று தவறாக திரித்து பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. அவர் மத நல்லிணக்க உணர்வோடு பேசியதை தவறாக பரப்பி வருகின்றனர்
Next Story