தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவியா மாதவன் என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியும் சமூக வலைதளங்களில் பெண் விமானி ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2016ஆம் ஆண்டு Yuva Desham என்ற பேஸ்புக் பக்கத்தில், “இவர் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த காயத்ரி சுப்ரான். இந்திய விமான வரலாற்றின் முதல் பெண் தலித் விமானி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, முதல் தலித் பெண் விமானி குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Times of India மற்றும் Bangalore Mirror, “21 ஆண்டுகளுக்கு பிறகு வணிக விமானி உரிமம் பெற்ற மதுரையைச் சேர்ந்த பெண்” என்று 2018ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தன. அதன்படி, “தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓட்டுனரான ரவிக்குமார் என்பவரது மகள் காவியா (22) வணிக விமானி உரிமம் பெற்ற பின்னர் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், காவியா கூறுகையில், “2014ல், பெங்களூரில் உள்ள அரசு விமான பயிற்சி பள்ளியில் தியரி வகுப்புக்குப் பிறகு மொத்தம் 35 மணிநேர நடைமுறை வகுப்புகளுக்கு மட்டுமே நிதி இருந்தது. 200 மணிநேரம் கட்டாய வகுப்புகளில் கலந்துகொள்ள பணம் இல்லாததால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்தோம். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக, மத்திய அரசின் SC பிரிவினருக்கான கல்வி உதவித்தொகையின் கீழ் விண்ணப்பித்து ரூபாய் 20 லட்சம் கிடைத்தது” என்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூர் விமான பயிற்சி பள்ளியிலிருந்து முதல் முறையாக வணிக உரிமம் பெற்ற முதல் நபர் காவியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் காவியா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டியல் சமூகம் என்பது தலித் சமூகம் தான். எனவே காவியா அச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.
மேலும் தேடுகையில், வைரலாகும் புகைப்படத்தில் உள்ள காயத்ரி சுப்ரானின் தந்தை Facts Crescendo Malayalamதிற்கு 2019ஆம் ஆண்டு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில், “2015ல் இருந்து ஃபேஸ்புக்கில் இத்தகைய பதிவுகள் வருவது தெரிய வந்தது, அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காயத்ரிக்கு இன்னும் ஒரு தேர்வு இருக்கிறது. அதன் பின்னரே விமானி உரிமம் பெறப்படும்” என்று கூறியுள்ளார். காயத்ரி சுப்ரானும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் காயத்ரி சுப்ரான் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை விமானி உரிமம் பெறவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி யார் என்பது குறித்து தேடுகையில் அது தொடர்பான தெளிவான தகவல் ஏதும் இல்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவியா மாதவன் என்று வைரலாகும் பதிவில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள பெண் காயத்ரி சுப்ரான் என்பதும் அவர் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை விமானி உரிமம் பெறவில்லை என்றும் மதுரையைச் சேர்ந்த காவியா என்பவர் முதல் தலித் பெண் விமானி என்றும் நம்பப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி யார் என்பது குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லை.