Fact Check: பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை உயர்த்தியதா தமிழ்நாடு அரசு?

பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  9 May 2024 11:13 PM IST
Fact Check: பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை உயர்த்தியதா தமிழ்நாடு அரசு?
Claim: தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை உயர்த்தியதாக வைரலாகும் செய்தி
Fact: 2023ஆம் ஆண்டு வெளியான செய்தி தற்போது பரவி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரரசு முத்திரைக் கட்டணத்தை மட்டுமே உயர்த்தியுள்ளது

“பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு” என்ற தலைப்பில் Way2news வெளியிட்டிருந்த செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், “தமிழக பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு ₹20லிருந்து ₹200, தனிமனைக்கான கட்டணம் ₹200லிருந்து ₹1000, பிரமாணப் பத்திரப் பதிவு, ஒப்பந்தம் பதிவு கட்டணம் ₹20லிருந்து ₹2000, செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு ₹4,000லிருந்து ₹10,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் செய்தி

Fact-check:

இது உண்மை தானா பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் சமீபத்தில் உயர்த்தப்பட்டனவா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “ஜூலை 10 முதல் பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்வு: எவ்வளவு?” என்ற தலைப்பில் 2023ஆம் ஆண்டு ஜுலை 8ஆம் தேதி தினமணி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், “பதிவுத்துறையால் அளிக்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத் துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணங்களைப் பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண விகிதங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

நாளை(ஜுலை 10, 2023) முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு அரசின் முடிவின்படி, ரசீது ஆவணத்துக்கான பதிவுக் கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200ஆகவும், குடும்ப நபா்களுக்கு இடையிலான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000ல் இருந்து ரூ.10,000ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரைத் தீா்வு ரூ.25,000ல் இருந்து ரூ.40,000ஆகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ. 1,000ஆகவும் உயா்த்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதே செய்தியை மாலைமலர் ஊடகமும் 2023ஆம் ஆண்டு ஜுலை 8ஆம் தேதி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, தேடுகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. மாறாக, ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழ்நாடு பதிவுத்துறை உயர்த்தியுள்ளது என்று நேற்று (மே 8) இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தமிழ்நாடு பதிவுத்துறை முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதே தவிற பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை உயர்த்தவில்லை. 2023ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சேவைக் கட்டணம் தொடர்பான செய்தி தற்போது தவறாக பரவி வருகிறது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:பதிவுத்துறை சேவைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியதாக வைரலாகும் செய்தி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:2023ஆம் ஆண்டு வெளியான செய்தி தற்போது பரவி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரரசு முத்திரைக் கட்டணத்தை மட்டுமே உயர்த்தியுள்ளது
Next Story