"#நிலாவில் மனிதனை கால் பதிக்க வைப்பது #தேசிய_மாடல்.. #பூமியிலேயே நிலவை போல் மனிதனை கால் பதிக்க வைப்பது #திரா_விடியா_மாடல்…" என்ற கேப்ஷனுடன் 18 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரியினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், மேடு பள்ளமாக உள்ள சாலையில் விண்வெளி உடையைப் போன்ற உடை அணிந்த நபர் நிலவில் நடப்பது போன்று நடந்து காட்டுகிறார்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி The Economic Times வைரலாகும் காணொலியுடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, "ஓவியரும், சமூக ஆர்வலருமான பாதல் நஞ்சுண்டசாமி, நகரின் மோசமான உள்கட்டமைப்பை சித்தரிப்பதற்காக பள்ளங்கள் நிறைந்த பெங்களூருவின் தெருவில் நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர் நடந்து செல்வது போன்ற காட்சியை சித்தரித்துக் காட்டியுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், The Quint வெளியிட்டுள்ள செய்தியில், "சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கு முன், விண்வெளி வீரர் போல் உடையணிந்த ஒரு நபரின் காணொலி வைரலாகி உள்ளது. பெங்களூரு துங்காநகர் பிரதான சாலையில் எடுக்கப்பட்ட காணொலி, நிலவின் மேற்பரப்பைப் போன்று பள்ளம் நிறைந்த சாலையின் வழியாக ஒரு மனிதன் நடந்து செல்வது படமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பெங்களூருவைச் சேர்ந்த பாதல் நஞ்சுண்டசாமி, சாலையில் இருந்த குழிகள் நிலவின் மேற்பரப்பைப் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. போக்குவரத்து விளக்குகள் மற்றும் வாகனங்களின் விளக்கொளி காணொலியில் ஒரு மிகப்பெரும் மாற்றத்தைச் சேர்க்க உதவியது என்று தெரிவித்தார்" என்று பதிவாகியுள்ளது. இதனை, The Guardian ஊடகமும் தனது யூடியூப் சேனலில் செய்தியாக வெளியிட்டுள்ளது.
The Guardian வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
நமது தேடலின் முடிவாக தமிழ்நாட்டு சாலையின் நிலை எனக்கூறி வைரலாகும் காணொலி உண்மையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.