தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. இந்நிலையில், “டாஸ்மாக் கடைகளின் நேரம் நாளை முதல் குறைப்பு: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறப்பு என அறிவிப்பு” என்று தந்தி டிவியின் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் பழையது என்றும் அவ்வாறான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை என்பதும் தெரிய வந்தது. முதலில் செய்தியை ஆய்வு செய்ததில் இத்தகவல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வெளியான செய்தி என்பது தெரியவந்தது. மேலும், அச்சமயம் கரோனா தொற்று பரவல் காரணமாக இத்தகைய நேரக்குறைப்பு நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டது செய்தியின் மூலம் தெரியவந்தது.
தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஏதும் வெளியிட்டதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு அறிவிப்பையும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. மாறாக, 2023ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி சமயம் தமிழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, “டாஸ்மாக் விற்பனை நேரத்தை 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உயர் நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சர் முத்துச்சாமி, “நீதிமன்ற பரிந்துரை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு முடிவெடுக்கப்படும்” என்று 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி விளக்கமளித்துள்ளார். ஆனால், அத்தகைய நேர மாற்றத்தை டாஸ்மாக் நிர்வாகம் தற்போது வரை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக டாஸ்மாக் கடைகளில் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பழையது என்றும் அவ்வாறாக சமீபத்தில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.