Fact Check: கோவில் இடிக்கப்படும் வைரல் காணொலி? உண்மை என்ன?
விநாயகர் கோவில் ஒன்று கொட்டும் மழையிலும் இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali
Claim:தமிழ்நாடு அரசின் உத்தரவால் இடிக்கப்படும் விநாயகர் கோவில்
Fact:நீதிமன்ற உத்தரவின் பேரில் விநாயகர் கோவிலோடு சேர்த்து 36 ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் இடிக்கப்பட்டன
“கொட்டும் மழையிலும் விநாயகர் கோவில் இடிப்பு… நீங்க ஆட்சி வந்து கோவில்களை இடிச்சது தாண்டா உங்க சாதனை..” என்ற கேப்ஷனுடன் கள்ளக்குறிச்சி காந்தி சாலை அருகே உள்ள கோவில் ஒன்று இடிக்கப்படும் காணொலி காட்சி ஒன்று வலதுசாரியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இதனை இடிப்பது போன்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நேற்று (ஜூன் 02) நக்கீரன் ஊடகம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இதனை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்க சிலர் வழக்கு தொடர்ந்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இடிப்பதை அதிகாரிகள் நிறுத்தினர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, “நீங்களே ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம்” என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.
அகற்றாத கட்டங்களை கடந்த மே 28ஆம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும், காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் தர்ம சாஸ்தா கோவிலை அகற்றுவது தொடர்பாக நேற்று கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஜீன் 1ஆம் தேதி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள பாசன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோவில்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டதாக நேற்று(ஜுன் 2) தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது, “நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தியதாகவும், அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் இடிக்கப்பட்டதாகவும்” கூறினார். மேலும், பத்திரிக்கையாளர் ராஜ் பிரியன் கூறுகையில், “சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் கோவிலுடன் சேர்த்து அகற்றப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்று கூறி இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இது முழுவதும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. மேலும், ஆகாம விதிகளின்படியே கோவிலில் இருந்த சிலைகளும் அகற்றப்பட்டது” என்று தெரிவித்தார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டம் காந்தி சாலையில் உள்ள விநாயகர் கோவில் உள்பட 36 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், கோவில் மட்டும் தனியாக இடிக்கப்பட்டது போன்று வலதுசாரியினர் தவறாக பரப்பி வருகின்றனர்.