அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். அச்சமயம் தற்காலிக பணியாளர்கள் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தற்காலிக ஓட்டுனர் ஓட்டி வந்த அரசு பேருந்து., கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்.... ஸ்ட்ரைக் முடியும் வரை உயிரோடு இருப்போமான்னு தெரியல.....” என்ற கேப்ஷனுடன் பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, மின்னம்பலம் 2023ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல் கொத்தனூரில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது” என்று கூறப்பட்டுள்ளது.
The Hindu வெளியிட்டுள்ள செய்தியில், “திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கல்கொத்தனூரில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 25, 2023) மாலை அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 43 பேர் காயமடைந்தனர்.” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை NDTV உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் சம்பவம் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.