"டென்மார்க் நாடு முஸ்லிம்கள் ஓட்டு போடும் உரிமையை ரத்து செய்தது." என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வலதுசாரியினர் பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, தகவலை உறுதி செய்வதற்காக டென்மார்க் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடினோம். அப்போது, " டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மற்றும் டென்மார்க்கில் வாக்களிக்க தகுதியான குறைந்தபட்சம் 18 வயதுடைய டேனிஷ் குடிமக்கள் வாக்களிக்க உரிமை உண்டு" என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மதத்தின் அடிப்படையில் டென்மார்க்கில் வாக்குரிமை மறுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
டென்மார்க் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
தொடர்ந்து இது குறித்து தேடிய போது, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களுடன் இணைந்து பணியாற்ற வெளிநாடுகளுக்கு சென்ற டென்மார்க்கை சேர்ந்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்யப்படுவதாக டென்மார்க் அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதே செய்தியை DW, என்டிடிவி போன்ற செய்தி நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
இறுதியாக நம் தேடலின் மூலம், டென்மார்க் நாட்டில் முஸ்லீம்கள் ஓட்டு போடும் உரிமை ரத்து செய்யபட்டதாக பகிரப்படும் தகவல் பொய்யானது என்றும் அவ்வாறாக டென்மார்க் அரசாங்கம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது