“கபாலீஸ்வரர் என்ற பெயர் இயேசு கிறிஸ்துவைத் தான் குறிக்கும். ஈசன் என்பது தான் இயேசு என்று ஆகி இருக்கிறது, அது தான் ஜீஸஸ் என்று மருவி இருக்கிறது. எனவே, கிறிஸ்தவம் என்பது தமிழர்களின் இந்து மதம் தான்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியில் இருக்கும், “திருக்குறள் பற்றிய நூள் வெளியீடு” என்ற வார்த்தையை கொண்டு ஃபேஸ்புக்கில் தேடினோம். அப்போது, 2021ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் “திருக்குறள் பற்றிய புரட்சி நூல் வெளியிட்டு விழா மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.. இடம்:சென்னை ECI சர்ச் கீழ்ப்பாக்கம்” என்ற கேப்ஷனுடன் காணொலி(Archive) ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 1:30 பகுதியில் “இயேசு என்ற சொல்லே ஈசன் என்பதில் இருந்து வந்ததாக நம்முடைய நூலாசிரியர் ஐயா தெய்வநாயகம் அவர்கள் பதிவு செய்கிறார். அதற்கு பாரதியார் பாடலில் இருந்தே ஒரு வரியை எடுத்து கையாள்கிறார்” என்று கூறிவிட்டு தொடர்ச்சியாக “ஈசன் என்பது தான் இயேசு என்று ஆகி இருக்கிறது, அது தான் ஜீஸஸ் என்று மருவி இருக்கிறது.
எனவே, கிறிஸ்தவம் என்பது தமிழர்களின் இந்து மதம் தான், இந்து சமயம் தான் என்று, இந்து சமயத்தை ஆரியர்களின் இந்து மதம், தமிழர்களின் இந்து மதம் என்று இரண்டாகப் பிரிக்கிறார். சைவமும், வைணவமும் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் கண்டறிந்த மதங்கள் அல்லது வழிபாட்டு முறைகள் என்று நம்முடைய ஐயா(தெய்வநாயகம்) அவர்கள் பதிவு செய்திருக்கிறார்” என்று கூறுகிறார்.
இதன் மூலம் நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதிய “திருக்குறள் பற்றிய புரட்சி” என்ற நூலில் இருந்து கிறிஸ்தவம் குறித்த பல்வேறு தகவல்களை திருமாவளவன் சுட்டிக்காட்டி பேசுவது தெரிய வருகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கபாலீஸ்வரர் என்ற பெயர் இயேசு கிறிஸ்துவைத் தான் குறிக்கும் என்றும் கிறித்தவம் என்பது தமிழர்களின் இந்து மதம் என்றெல்லாம் திருமாவளவன் பேசியது அவரது கருத்து இல்லை என்றும் “திருக்குறள் பற்றிய புரட்சி” என்ற நூலில் உள்ள கருத்தை தான் திருமாவளவன் சுட்டிக்காட்டி பேசினார் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், நூலாசிரியர் தான் இத்தகைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார் என்று திருமாவளவன் கூறியதை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக கூற முடிகிறது.