விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் எம்.பி திருமாவளவன் ஒரு பாலியல் குற்றவாளி என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பரவி வருகிறது. மேலும் அதில், அவர் அரசாங்க ஊழியராக பணியாற்றிய போது உதவி கேட்டு வந்த பட்டியலின பெண்களை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். இதனால், அவர் தனது வேலையை இழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருமாவளவன் அரை நிர்வாணத்துடன் பெண்ணிற்கு அருகே நிற்கும் புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது.

Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பதும் இத்தகவல் தவறானது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய திருமாவளவன் மீது பாலியல் வழக்கு எதுவும் பதியப்பட்டுள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.
அப்போது, வைரலாகும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படத்தை SSivakkrishnan என்ற எக்ஸ் பயனர் 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு பல்வேறு நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திகளும் இடம்பெற்றிருந்தன. அச்செய்திகளின்படி, “தேசிய கட்சி பிரமுகர் ஒருவர் கோவையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கியதாகவும், கர்ப்பத்தை களைத்த பிறகு ஏமாற்றியதாகவும் திருமுருகன்பூண்டி காவல்துறையினரிடம் புகார் மனு அளித்து இருந்தார்.
இரு புகைப்படங்களின் வேறுபாடு
புகார் அளிக்கப்பட்ட தேசிய கட்சி பிரமுகர் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி அந்த பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும்போது வீடியோ எடுத்து பணம் பறிப்பதாக புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தை ஃபோட்டோ ஃபோரன்சிக் முறையில் ஆய்வு செய்த போது வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாலியல் வழக்கில் சிக்கியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.