Fact Check: திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: மு.க. ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு தகுதி இல்லை என்று கூறினாரா ஆ. ராசா?
By Ahamed Ali
Claim:மு.க. ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு தகுதி இல்லை என்று திமுக எம்பி ஆ. ராசா கூறினார்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி 2020ஆம் ஆண்டு நடந்த தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்து ஆ. ராசா தெரிவித்த கருத்தாகும்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவர் காவல்துறையினரின் விசாரணையின் போது மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக ஐந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இம்மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வைரலாகும் பதிவு
இந்நிலையில், திமுக எம்பி ஆ. ராசா தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பதற்கு மு.க. ஸ்டாலின் தகுதி இல்லாதவர் என்று பெயர் குறிப்பிடாமல் கூறுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசும் அவர், “லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. இவற்றை தவிர்ப்பதற்கு ஒரு நல்ல முதல்வர் முடிவெடுக்க வேண்டுமே தவிர காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர் ஒன்றுமே இல்லை என்று சர்வசாதாரணமாக பதில் சொன்னால் நன்றாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
பிறகு “நான் குற்றம் சாட்டுகிறேன், உங்களது ஸ்டேட்மெண்ட், உளறல் உள்ளிட்டவற்றை கொண்டு கூறுகிறேன் நீங்கள் முதல்வராக இருப்பதற்கு எந்த தார்மீக அடிப்படையும் தகுதியும் கிடையாது” என்கிறார். சமீபத்தில் நடைபெற்ற திருப்புவனம் இளைஞர் கொலை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஆ. ராசா தெரிவித்த கருத்து போன்று இதனை தற்போது பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் 2020ஆம் ஆண்டு ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்கப் மரணம் தொடர்பாக ஆ. ராசா பேசிய கருத்து என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலி சமீபத்தில் எடுக்கப்பட்டது தானா என்பதை கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீபோர்ட் செய்து பார்த்தபோது 2020 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி Behindwoods Air ஆ. ராசாவிடம் எடுத்த பேட்டியை பதிவிட்டுள்ளது. காணொலியின் துவக்கத்திலேயே “சாத்தான்குளத்தில் நடைபெற்றுள்ள சம்பவங்களின் கோர்வையை பார்த்தால் அது திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாக உள்ளது” என்கிறார் ஆ. ராசா. இதன் மூலம் 2020ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறையினரால் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து சம்பவம் குறித்து பேசுகிறார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து காணொலியை ஆய்வு செய்ததில் 18:23 முதல் 18:48 வரையிலான பகுதியில் வைரலாகும் காணொலியில் உள்ள அதே பகுதி இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. அதில் பேசும் ஆ. ராசா, “அதிமுக ஆட்சியிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, திமுக ஆட்சியிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. இவற்றை தவிர்ப்பதற்கு ஒரு நல்ல முதல்வர் முடிவெடுக்க வேண்டுமே தவிர காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர் ஒன்றுமே இல்லை என்று சர்வசாதாரணமாக பதில் சொன்னால் நன்றாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
பிறகு “நான் குற்றம் சாட்டுகிறேன், உங்களது ஸ்டேட்மெண்ட், உளறல் உள்ளிட்டவற்றை கொண்டு கூறுகிறேன் நீங்கள் முதல்வராக இருப்பதற்கு எந்த தார்மீக அடிப்படையும் தகுதியும் கிடையாது” என்கிறார். இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்து ஆ. ராசா தெரிவித்த கருத்து என்று தெரியவருகிறது.
Conclusion:
முதல்வராக இருப்பதற்கு தார்மீக அடிப்படையில் தகுதி இல்லை என்று ஆ. ராசா சமீபத்தில் கருத்து தெரிவித்ததாக பரவி வரும் காணொலி பழையது என்றும் 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் லாக்கப் மரணம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து என்றும் தெரியவந்தது.