“இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயன் பாஷை புரியுது… காங்கிரஸ் கட்சியில் யார் அதிகமாக உளறுவது என்று ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இவர் #திருவள்ளூர் காங்கிரஸ் MP ஜெயக்குமார்” என்ற கேப்ஷனுடன் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜெயக்குமார் அளித்த பேட்டியின் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “அயோத்தி ராமர் கோயிலை அதானி தான் திறந்துவைத்தார். கோயிலை திறந்து வைக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது என்று நான் கூறவில்லை இந்து மதத்தலைவர்கள் மற்றும் பூசாரிகள் கூறுகின்றனர். ராமர் கோயிலை அதானி திறக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்” என மோடியின் பெயருக்கு பதிலாக அதானியின் பெயரை கூறி ஜெயக்குமார் உளறினார் என்று வலதுசாரியினர் பலரும் பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி TRENDING VIDEOS என்ற யூடியூப் சேனலில் “அதானி: தேர்தல் வந்தாலே எம்பி கோவப்படுவார் பாருங்க” என்ற தலைப்பில் வைரலாகும் காணொலியின் முழு நீளக் காணொலி வெளியிடப்பட்டிருந்தது.
காணொலியில் எம்பி ஜெயக்குமார், “அயோத்தி ராமர் கோயிலை அதானி தான் திறந்து வைத்தார். கோயிலை திறந்து வைக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது என்று நான் கூறவில்லை இந்து மதத்தலைவர்கள் மற்றும் பூசாரிகள் கூறுகின்றனர், அதானி ராமர் கோயிலை திறக்கக் கூடாது” என்று கூறுகிறார். தொடர்ந்து, 5:51 பகுதியில் செய்தியாளர் ஒருவர் “அதானி” இல்லை “மோடி” என்று எம்பியின் தவறை சுட்டிக்காட்டவே எம்பியும் தனது தவறை திருத்திக்கொண்டு மீண்டும் “மோடி” என்று கூறுவதை நம்மால் காண முடிகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஜெயக்குமார் ராமர் கோயிலை திறந்து வைத்தது அதானி என்று கூறியதாக வைரலாகும் காணொலியில் கடைசியாக அவர் தனது தவறை திருத்திக் கொண்டு அதானிக்கு பதிலாக மோடி என்று கூறும் பகுதியை மட்டும் விட்டுவிட்டு தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.