“அருள்மிகு அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கோவிலுக்கு கொண்டு செல்லும் ஆலய மணிகள்… இந்த ஆலய மணிகள் திருச்சி பெல் கம்பெனியில் வடிவமைக்கப்பட்டு நாமக்கல் விஸ்வகர்மா தொழிலாளர்களால் மெருகூட்டி கண் திறந்து இப்போது அயோத்தி சென்றுள்ளது காணொளி காட்சி” என்று லாரியில் ஆலய மணிகள் ஏற்றும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெல் நிறுவனம் ராமர் கோயிலுக்கான ஆலய மணிகளை தயாரித்ததாக கூற முயற்சிக்கின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி Asianet செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள், ஜனவரி 22இல் நடைபெற இருக்கும் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்காக 42 மணிகளை தயாரித்து ராமர் கோயிலுக்காக பங்களித்துள்ளனர்.
கடந்த வாரம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு மொத்தம் 1,250 கிலோ எடை கொண்ட இந்த மணிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று பக்தர்களின் கோஷத்திற்கு மத்தியில் அயோத்திக்கு செல்லும் மணிகளின் காணொலி வைரலானது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “பெங்களூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவர் 48 மணிகள் தயாரிக்க நாமக்கல், மோகனூர் சாலையில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இவற்றில், 42 மணிகள் மட்டும் தற்போது தயாரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவை விரைவில் அனுப்பி வைக்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது. New Indian Express, CNBCTV18 உள்ளிட்ட ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி பெல் நிறுவனம் ஆலயமணிகள் தயாரித்து அனுப்பியதாக வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் அது நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த மணிகள் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.