திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் வலதுசாரியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மலையின் மீது இருக்கும் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகள் பலியிடப்படுவதால், அங்குள்ள முருகன் கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படுகிறது என்று கூறி வந்தனர். தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுப்போம் என்று பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என பல்வேறு அமைப்பினர் இணைந்து திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 4ஆம் தேதியும் பழங்காநத்தத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், “திமுகவின் Security Guard ஆக மாறிப்போன தமிழக போலீசின் பரிதாப நிலை. நெல்லையில் முருகனுக்கு காவடி எடுத்து வந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி கைது…!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், திருநெல்வேலியின் முன்னாள் அதிமுக மேயர் புவனேஸ்வரி காவடியுடன் கைது செய்யப்படும் காட்சி பதிவாகியுள்ளது. முன்னாள் மேயர் புவனேஸ்வரி முருகனுக்கு காவடி எடுக்கும்போது அதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் கைது செய்வதாக கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் புவனேஸ்வரி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது.
வைரலாகும் இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி The Hindu இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், “திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதுரைக்கு செல்ல முயன்ற இந்து முன்னணி மற்றும் பிற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு காவடியுடன் சென்ற முன்னாள் மேயர் புவனேஸ்வரியை, அங்குள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். திருச்செந்தூருக்கு விசேஷ பூஜை செய்யப் போவதாக அவர் காவல்துறையினரிடம் கூறியபோதும், புவனேஸ்வரியை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று மாலையில் விடுவித்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரை கைது செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை பாலிமர் ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், “இந்துக்களை ஒடுக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் மலை எங்களுடைய மலை முருகனின் மலை, இந்துக்களே. இன்று மழைக்குப் போகக்கூடாது என்று கூறுபவர்கள், நாளை உங்களை வீதியில் செல்லக்கூடாது என்று கூறுவார்கள்” என்கிறார். இதன் மூலம் அவர் திருப்பரங்குன்றம் சர்ச்சையைத் தொடர்ந்தே காவடி எடுத்துள்ளார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, “திருப்பரங்குன்றத்திற்கு காவடி எடுத்துச் சென்ற முன்னாள் அதிமுக மேயர் புவனேஸ்வரி நெல்லை ரயில் நிலையம் முன்பு கைது” என்ற தகவலுடன் பிப்ரவரி 4ஆம் தேதி Nellai Nagarajan என்ற பாலிமர் ஊடகத்தின் செய்தியாளர் தனது எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக முருகனுக்கு காவடி எடுத்துச் சென்றதற்காக நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர் திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.